மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா 50 ஆயிரம் பக்தர்கள் திரண்டதால் களை கட்டியது ஊட்டி

ஊட்டி, ஏப். 20:  ஊட்டி மாரியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் 50 ஆயிரம் பக்தர்கள் திரண்டு கலந்து கொண்டதால் ஊட்டி நகரமே களை கட்டியது. ஆண்டுதோறும் ஊட்டியில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழா ஒரு மாத காலம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நாள்தோறும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் பவனி வருவது வழக்கம். இந்த ஆண்டு கோயில் திருவிழா கடந்த மாதம் 18ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த மக்களின் உபயமாக தேர் பவனி நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன.

முக்கிய விழாவான பெரிய தேர் பவனி நேற்று நடந்தது. பிற்பகல் 2 மணிக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து பல ஆயிரம் பக்தர்கள் ஓம்சக்தி, பராசக்தி கோஷத்துடன் தேரை இழுத்துச் சென்றனர்.  பெரிய தேருக்கு முன் பல சிறிய தேர்கள் அணி வகுத்து சென்றன. இதனை காணவும், அம்மனின் அருளை பெறவும் மாவட்டம் முழுவதிலும் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் வந்திருந்தனர். தேர் திருவிழாவையொட்டி நகரில் பல்வேறு சாலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது.  கமர்சியல் சாலையில் வானங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டதால், மாரியம்மன் கோயில் வளாகம், அப்பர் பஜார் சாலை களைகட்டியது. மேலும், பக்தர்கள் அதிகளவு திரண்ட நிலையில், போக்குவரத்து சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

தேர்த்திருவிழாவையொட்டி ஊட்டியில் பாரம் தூக்கம் தொழிலாளர்கள் சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடந்தது. இதனை காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் சம்பத்குமார் துவக்கி வைத்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: