2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா நோயாளிகள் இல்லாத கோவை அரசு மருத்துவமனை

கோவை, ஏப். 20:  கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொரோனா நோயாளிகள் அனைவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், கொரோனா இல்லாத மருத்துவமனையாக மாறியது. கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு இருந்து வந்தது. குறிப்பாக, கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் ஆம்புலன்ஸ் நிற்ககூட இடம் இல்லாத வகையில் நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தனர்.

தமிழக அளவில் சென்னையை விட கோவையில் அதிகளவிலான நோயாளிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மே மாதம் ஒரே நாளில் அதிகபட்சமாக 47 பேர் வரை உயிரிழந்தனர். இதனால், கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டர்கள், நர்சுகள் எந்த நேரமும் பரபரப்புடன் காணப்பட்டனர். நோயாளிகளின் உறவினர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டபோது எல்லாம் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மனஉளைச்சல் அடைந்தனர். இருப்பினும், சிறப்பான சிகிச்சையை கொரோனா நோயாளிகளுக்கு தொடர்ந்து அளித்து வந்தனர்.

இந்நிலையில், தடுப்பூசி மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இதனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கையும் குறைந்தது. தவிர, கடந்த ஒரு வாரமாக கொரோனா வார்டில் 10-க்கும் கீழ் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று கோவை அரசு மருத்துவமனையில் ஒரு கொரோனா நோயாளிகள் கூட சிகிச்சையில் இல்லை. அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது குறித்து அரசு மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறுகையில், ”கோவை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு ஏற்படுத்தப்பட்டது.

இந்த வார்களில் கடந்த 2 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது, நோய் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. சிகிச்சையில் இருந்த நோயாளிகளும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, வார்டில் ஒரு நோயாளிகூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், முன்னெரிச்கை நடவடிக்கையாக கொரோனா வார்டை மாற்றம் செய்யாமல் உள்ளோம். தினமும், 50-க்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது” என்றார்.

Related Stories: