×

சூளகிரியில் ஆலங்கட்டி மழை; ராகி, வெண்டை பயிர்கள் சேதம்

சூளகிரி, ஏப்.20: சூளகிரியில் பெய்த ஆலங்கட்டி மழையால் ராகி, வெண்டை மற்றும் சோளப்பயிர்கள் சேதமடைந்தது. தமிழகத்தில் தற்போது மாலை மற்றும் இரவு நேரங்களில் கோடை மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, தளி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, தென்பெண்ணையாற்று பகுதி மற்றும் சூளகிரியில் கடந்த 2 நாட்களாக மாலை மற்றும் இரவில் பலத்த மழை கொட்டி வருகிறது. நேற்று முன்தினம் இரவு சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. வேம்பள்ளி கிராமத்தில் ஆலங்கட்டியுடன் கூடிய மழை பெய்தது. இந்த ஆலங்கட்டி மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த ராகி பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தக்காளி, கத்தரிக்காய், வெண்டை உள்ளிட்ட காய்கறி செடிகள் சாய்து நாசமானது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த சில நாட்களாக மழை பெய்த நிலையில், வயல் வரப்புகளுக்கு தண்ணீர் தேவை குறைந்தது. ஆனால், நேற்று முன்தினம் பெய்த ஆலங்கட்டி மழையால் ராகி பயிர்கள் அடியோடு சாய்ந்து நாசமாகியுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றனர். சூளகிரி மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று மாலை 5 மணி அளவில் கன மழை கொட்டியது. சப்படி, கோனேரிப்பள்ளி, அட்டக்குறுக்கி, காமன்தொட்டி, கோபசந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இடியயுடன் வடிய ஆலங்கட்டி மழை பெய்தது. விளைநிலங்கள், தெருக்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் மழை நீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் வாகனங்களை மெதுவாக இயக்கினர். அதேபோல், நேற்று மாலை ஓசூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் ஆலங்கட்டியுடன் கூடிய கனமழை பெய்தது.

பலத்த சூறைக்காற்றுக்கு வாழை மரங்கள் முறிந்தன. போச்சம்பள்ளியில், வீசிய பலத்த சூறைக்காற்றால் ஏராளமான வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதில் ₹50 ஆயிரத்திற்கும் மேல் சேதம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வெயில் வாட்டியெடுத்து வருகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடைக்கு முன்பிருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கடும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்கள், நுங்கு, இளநீர், பழச்சாறு மற்றும் வெள்ளரி, கரும்புச்சாறு, கம்பங்கூல் பருகி ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.

இதனிடையே கடந்த சில நாட்களாக காலையில் வெயில் சுட்டெரித்தாலும் மாலை வேளையில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் போச்சம்பள்ளி பகுதியில் பலத்த மழை பெய்தது. கன மழையால் தாழ்வான இடங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. மழையின்போது போச்சம்பள்ளி பகுதியில் சூறைக்காற்று வீசியது. போச்சம்பள்ளி அருகே திருவணப்பட்டி கிராமத்தில் வீசிய பலத்த காற்றுக்கு பல்வேறு இடங்களில் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. இதில், குலை தள்ளிய நிலையில் இருந்த ஏராளமான வாழைகள் பாரம் தாங்காமல் அடியோடு சாய்ந்து நாசமானது. அதேபோல், 5 தென்னை கன்றுகளும் அடியோடு சாய்ந்தது.

Tags : Choolagiri ,
× RELATED ஆவணங்களின்றி கொண்டு சென்ற ₹1.35 லட்சம் பறிமுதல்