×

வேதாரண்யம் பகுதியில் கொள்ளிடம் ஊராட்சிகளில் அரசு வீடு கட்டும் பயனாளிகளுக்கு சிமெண்ட்டுடன் மணலும் வழங்க வலியுறுத்தல்

கொள்ளிடம், ஏப்.20: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த 42 ஊராட்சிகளிலும் அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தற்போது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசின் கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பயனாளிகளுக்கு அரசு சார்பில் சிமெண்ட் மூட்டைகள், இரும்பு கம்பிகள் ஜன்னல் கதவு உள்ளிட்ட கட்டுமானப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் உரிய தொகை வரவு வைக்கப்படுகிறது. நீதானே பயனாளிகள் எடுத்து வீடு கட்டும் பணிக்கு பயன்படுத்தி வருகின்றனர். கொள்ளிடம் பகுதியில் அரசின் கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வந்தாலும் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் மணல் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால் வீடு கட்டும் பணியில் தாமதம் ஏற்படுகிறது. கடந்த 10 தினங்களாக கொள்ளிடம் அருகே உள்ள மாதிரவேளூர் கிராமத்தில் அரசின் சார்பில் மணல் குவாரி துவக்கப்பட்டு, இணையதளத்தின் மூலம் பதிவு செய்யும் பயனாளிகள் மணலை வாங்கி செல்கின்றனர். இங்கிருந்து குறைந்த விலையில் பெறப்படும் மணல்,லாரிகள் மூலம் பல மாவட்டங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் கொள்ளிடம் பகுதியில் உள்ள அரசு வீடு கட்டும் பயனாளிகளுக்கு மணல் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கூழையார் கிராமத்தைச் சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினரும்,சமூக ஆர்வலருமான அங்குதன் கூறுகையில், அரசின் வீடு கட்டும் பயனாளிகளுக்கு கட்டுமான பொருட்கள் மற்றும் உரிய ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது.ஆனால் உரிய நேரத்தில் வீடுகளை கட்டி முடிப்பதற்கு மணல் இன்றி வீடு கட்டும் பயனாளிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.எனவே ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் அரசு வீடு கட்டும் பயனாளிகளுக்கு சிமெண்ட் மூட்டைகள் வழங்கும்போது அத்துடன் தேவையான மணலையும் சேர்த்து வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இதுகுறித்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags : Kollidam ,Vedaranyam ,
× RELATED கொள்ளிடம் அருகே புத்தூரில் பாசன...