சீர்காழி அருகே சாலை விரிவாக்கத்திற்காக

சீர்காழி, ஏப்.20: சீர்காழி அருகே 100 ஆண்டுகள் பழமையான காத்திருப்பு சின்னந்தியம்மன் கோயில் இடிப்பு விவகாரம் குறித்து சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான சின்னந்தியம்மன் கோயில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக இடிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு அதற்கான இழப்பீட்டு தொகையும் இந்து சமய அறநிலையத்துறையிடம் வழங்கப்பட்டது. இந்துசமய அறநிலையத்துறையினர் புதிய கோயில் கட்ட எந்தவிதமான முயற்சியும் மேற்கொள்ளாததை கண்டித்தும், கோயிலை இடிக்கும் திட்டத்தை கைவிடக் கோரியும் கிராமவாசிகள் மற்றும் இந்து அமைப்புகள் இணைந்து கோயில் முன்பாக சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் தலைமையிலும், பாகசாலை இன்ஸ்பெக்டர் செல்வி முன்னிலையிலும் தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. கிராம மக்கள் சார்பில் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன், முன்னாள் அறங்காவலர் ராஜாங்கம், ராஜராஜன், சந்திரசேகர சிவம், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் செயல் அலுவலர் முருகன், தேசிய நெடுஞ்சாலை துறை (நகாய்) சார்பில் செண்பகராஜ், செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கோயில் கட்டுவது தொடர்பாக ஆணையர் அலுவலகத்திலிருந்து ஒரு மாத காலத்திற்குள் அனுமதி பெற்று அதிலிருந்து 15 தினங்களுக்குள் டெண்டர் விடப்படும் எனவும், உள்ளூர்வாசிகள் டெண்டர் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும், டெண்டர் விடப்பட்ட பின்னரே கோயில் அப்புறப்படுத்தப்படுமெனவும் முடிவு செய்யப்பட்டது. கோயிலுக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையால் வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகைக்கான வங்கி கணக்கின் பரிவர்த்தனை விபரங்களை செயல் அலுவலர் உடனடியாக தாக்கல் செய்வதாக தெரிவித்தார். கோயில் கட்ட டெண்டர் விட்ட பிறகே கோயில் அப்புறப்படுத்தபடுமென சம்மந்தப்பட்ட துறையின் சார்பில் உத்திரவாதம் அளிக்கப்பட்ட நிலையில் அறிவிக்கப்பட்ட சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கோயில் இடிக்கப்படும் சம்பவம் தொடர்பாக நிலவி வந்த பரபரப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

Related Stories: