×

குப்பை, கட்டுமான கழிவுகளை கொட்டுவதை தவிர்த்து சென்னையை தூய்மையாக பராமரிக்க வேண்டும்: அலுவலர்களுக்கு மேயர் பிரியா அறிவுறுத்தல்

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நேற்று ரிப்பன் கட்டட கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர்  ககன்தீப் சிங் பேடி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் இக்கூட்டத்தில் மேயர் பிரியா கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5100 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் சேகரமாகும்  குப்பைகளில் மக்கும் கழிவுகள் மாநகராட்சியின்  நுண்ணியிர் உரம் தயாரிக்கும் மையங்களுக்கு அனுப்பப்பட்டு, அவற்றிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 4ம் தேதி முதல் 17ம் தேதி வரை 15,534 கிலோ கிராம் இயற்கை உரங்கள் விற்பனை செய்யப்பட்டு மாநகராட்சிக்கு ரூ.1,37,080 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த 4ம் தேதி முதல் 17ம் தேதி வரை 2,79,832 கிலோ கிராம் உலர்க்கழிவுகள் விற்பனை செய்யப்பட்டு ரூ.17,82,210 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.அதைப்போன்று பொது வெளியில் விதிகளை மீறி குப்பைகளை கொட்டிய 478 நபர்களிடமிருந்து ரூ.2,78,800  அபராதம், கட்டிடக் கழிவுகளை கொட்டிய 159 நபர்களிடமிருந்து ரூ.3,32,387 அபராதம், சுவரொட்டிகள் ஒட்டிய 130 நபர்களிடமிருந்து ரூ.53,100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 49 பெருமளவு குப்பைகள் உருவாக்குபவர்களிடமிருந்து ரூ.1,27,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுவதை தவிர்த்து சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க அலுவலர்கள் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு மேயர் பிரியா கூறினார்.

Tags : Chennai ,Mayor Priya ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...