×

மீஞ்சூர் ஒன்றியத்தில் வரைபட அனுமதி பெறாத நிறுவனங்களுக்கு நோட்டீஸ்: அதிகாரிகள் நடவடிக்கை

பொன்னேரி: சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழுமம் எல்லைக்கு உட்பட்ட மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில்  தனியார் துறை தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இதில் கொண்டகரை, வெள்ளிவாயல்சாவடி, சுப்பாரெட்டிபாளையம் ஆகிய ஊராட்சிகளில் செயல்படும் பிரபல  நிறுவனங்கள் வரைபட அனுமதி பெறாமல் இயங்கி வந்தது. இத்தொழில் நிறுவனங்கள் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்திடமோ அல்லது மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திடமோ முறையான ஆவணங்கள் சமர்ப்பித்து கட்டிட வரைபட அனுமதி பெறவில்லை. மேலும் அதற்குண்டான அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையும் செலுத்தவில்லை.

இதுகுறித்து கடந்த 2021ம் ஆண்டு மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நினைவூட்டல் கடிதம் அந்தந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை அனுமதி பெறுவதற்கான எந்த முயற்சியும் இந்நிறுவனங்கள் எடுக்கவில்லை. ஆகையால் இந்த தகவல்களை சென்னை பெருநகர் வளர்ச்சி குழும உறுப்பினர் செயலளருக்கு மீஞ்சூர் ஒன்றிய தலைவர் மூலம் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி சென்னை சிஎம்டிஏ அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜெயக்குமார், ராகவன் ஆகியோர் நேற்று மீஞ்சூர் ஒன்றிய தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி(திமுக), ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், மீஞ்சூர் ஒன்றிய ஆணையாளர் ராமகிருஷ்ணன் ஆகியோருடன் சென்று அரசு வரைபட அனுமதிபெறாமல் இயங்கிய நிறுவனங்களுக்கு நேரில் சென்று நோட்டீஸ் வழங்கினர். மேலும் உடனடியாக கட்டிட வரைபட அனுமதிபெற்று அதற்கான தொகையை செலுத்த வேண்டும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

Tags : Minsur Union ,
× RELATED மீஞ்சூர் ஒன்றியத்தில் ஊட்டச்சத்து வார விழா