×

தாமதமாக வரும் பணியாளர்களால் சிவகாசி ஆதார் சேவை மையத்தில் கால்கடுக்க காத்திருக்கும் மக்கள்

சிவகாசி,ஏப்.19: சிவகாசி தாலுகா அலுவலகத்தில் இயங்கி வரும் ஆதார் சேவை மையத்தில் பணியாற்றும் பணியாளர்கள் காலை 10.30 மணிக்கு மேல் வருவதால் பொதுமக்கள் கால்கடுக்க காத்திருக்கின்றனர். சிவகாசி தாலுகா அலுவலகத்தில் நிரந்தர ஆதார் சேவை மையம் இயங்கி வருகின்றது. புதிய ஆதார் அட்டை பதிவு மற்றும் முகவரி, பெயர், செல்போன் நம்பர் மாற்றம் போன்ற பணிகளுக்காக தினமும் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் வருகின்றனர். இந்த ஆதார் சேவை மையத்தில் கூடுதல் கவுன்டர்கள், பணியாளர்கள் இல்லாதால் பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவல நிலை இருந்து வருகின்றது.

பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக பணியாளர்கள் யாரும் விடுமுறையில் சென்றால் ஆதார் சேவை மையம் பூட்டி வைக்கப்படுகின்றது. பணியாளர்கள் விடுமுறை தெரியாமல் கை குழந்தைகளை வைத்துக்கொண்டு பெண்கள் மணிக்கணக்கில் மரத்தடியில் காத்திருக்கின்றனர். இந்நிலையில் பணியில் இருக்கும் பணியாளர்களும் குறிபிட்ட நேரத்திற்கு வருவதும் கிடையாது.  அலுவலக பணியாளர்களின் வேலை நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை. ஆனால், காலை 10.30 மணிக்கு பிறகே பணிக்கு வருகின்றனர். இதனால் காலை 7 மணிக்கு வரும் பொதுமக்கள் ஆதார் பதிவு செய்ய மதியம் 12 ஆகி விடுகிறது.

தினமும் சுமார் 30 பேர்களுக்கு மட்டுமே பதிவு செய்ய முடியும் என்ற நிலையில் பலர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி செல்கின்றனர். பொதுமக்களின் சிரமங்களை தவிர்க்க சிறப்பு ஏற்பாடு எதுவும் செய்யாததால் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 20 கிலோ மீட்டர், 30 கிலோ மீட்டர் தூரத்தில் கிராமங்களில் இருந்து வரும் பொதுமக்கள் தினமும் ஆதார் சேவை மையத்திற்கு அலையாய் அலைந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்வது வாடிக்கையாக உள்ளது.

பொதுமக்களின் நலன் கருதி சிவகாசி ஆதார் சேவை மையத்தில் கூடுதல் பணியாளர்கள். கூடுதல் கவுன்டர்கள் திறக்க வேண்டும் என்றும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். காலை 9.30 மணிக்கே ஆதார் சேவை மையத்தை திறந்து 10மணிக்கு பணியை தொடங்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : Sivakasi Aadhar Service Center ,
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...