×

15 கிராமங்கள் பயன்பெறும் வகையில் பாப்பாங்குளம்-ஆனைக்குளம் சாலையை அகலப்படுத்த வேண்டும்: மக்கள் கோரிக்கை

திருப்புவனம், ஏப்.19: திருப்புவனம் அருகே லாடனேந்தலை அடுத்த பாப்பாங்குளம் விலக்கிலிருந்து ஆனைக்குளம் வரையிலான சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் திருப்புவனம் அருகே பாப்பாங்குளம் விலக்கிலிருந்து ஆனைக்குளம் கிராமச் சாலை உள்ளது. இந்த சாலையில் பாப்பாங்குளம், ஆலங்குளம், கொத்தங்குளம், முதுவன்திடல், கீழச் சொரிக்குளம், மேலச் சொரிக்குளம், குருந்தங்குளம், ஆனைக்குளம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கிராமப் பகுதிகளிலிருந்து மதுரை ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை சுமார் 11 கி.மீ தூரம் உள்ளது. இந்த வழித்தடத்தில் ஏராளமான கனரக வாகனங்கள் மட்டுமின்றி கார், இரு சக்கர வாகனங்களும் அதிகளவில் சென்று வருகின்றன. இந்நிலையில், இந்த சாலை மிகவும் குறுகிய அளவு இருப்பதாலும், சாலையின் இருபுறங்களிலும் சீமைக் கருவேல மரங்கள் அதிகளவில் படர்ந்திருப்பதாலும் இரு வாகனங்கள் எதிர், எதிரே சந்திக்கும் போது விலக முடியாமல் சுமார் 1 கி.மீ தூரம் பின்புறம் சென்று விலக வேண்டியுள்ளது.

இதன்காரணமாக, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவது மட்டுமின்றி, பேருந்துகளில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆகவே ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் பாப்பாங்குளம் விலக்கிலிருந்து ஆனைக்குளம் வரையிலான சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pappangulam-Anaikulam road ,
× RELATED மாநகர பேருந்துகளில் மின்னணு...