×

உத்திரமேரூர் தாலுகாவை பிரித்து சாலவாக்கத்தை புதிய தாலுகாவாக அறிவிக்க வேண்டும்: பேரவையில் திமுக எம்எல்ஏ க.சுந்தர் கோரிக்கை

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் தாலுகாவை பிரித்து உத்திரமேரூர் மற்றும் சாலவாக்கம் ஆகிய 2 தாலுகாவாக பிரிக்க  வேண்டும் என திமுக எம்எல்ஏ க.சுந்தர், சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார். சட்டப்பேரவையில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் (திமுக) பேசியதாவது: வருவாய் துறை மானிய கோரிக்கை என்றாலே பட்டா வழங்க வேண்டும், முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்திதான் பேசுவோம். பட்டாக்களை பொறுத்தவரை மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக புதிதாக வீடுகள் கட்டி வசிப்பதால் பட்டாக்களின் தேவை அதிகரிக்கிறது. கடந்த ஆண்டே மேய்க்கால், புறம்போக்கில், கிராமநத்தம், வண்டி பாட்டை தோப்பு ஆகிய இடங்களில் 7, 8 ஆண்டு காலமாக வசித்தவர்களுடைய பட்டியலை அரசு கணக்கெடுத்தது. கிராம நத்தம் போன்ற பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பட்டாக்கள் வழங்கப்படுகிறது. இந்த மேய்க்கால் நிலத்தில் வசிப்பவர்களுக்கு பட்டாக்கள் வழங்குவது நிலுவையில் உள்ளது. கலைஞர் ஆட்சியில் அரசாணை மூலம் பட்டாக்கள் 2009 முதல் 2010 வரை வழங்கப்பட்டது. அதைப்போல நம்முடைய மக்களின் அரசு ஒன்டைம் ஸ்பெஷல் அரசாணை போட்டு பட்டா வழங்க வேண்டும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர், வாலாஜாபாத், காஞ்சிபுரம் ஆகிய தாலுகாக்களில் ஏற்கனவே 1980-85ம் ஆண்டில் இருந்து வருவாய்த்துறை மூலமாகவும், ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக வழங்கப்பட்ட பட்டாக்கள் எதுவும் அரசாங்க கணக்கில் வரவில்லை. இதனால், பலர் இன்று அந்த பட்டாவை காண்பித்து இலவச வீட்டு வசதி அல்லது கடன் வசதியை பெற முடியாத நிலை உள்ளது. எனவே இந்த நிலையை சரி செய்ய ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டாக்களை அரசாங்க கணக்கில் ஏற்ற வேண்டும். அது ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாகவோ அல்லது வருவாய்த்துறை மூலமாக வழங்கப்பட்டாவழங்க விரைந்து செயல்படுத்த வேண்டும். அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்திலும் அந்த நிலைமை இருக்கிறது. எனவே இந்த குறையை சரி செய்ய வேண்டும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் 2 வருவாய் கோட்ட அலுவலகங்கள் உள்ளன. உத்திரமேரூர் தாலுகா என்பது 124 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி 2 லட்சம் பேர் வசிக்கின்ற தாலுகாவாக உள்ளது. எனவே அதை உத்திரமேரூர் மற்றும் சாலவாக்கம் என 2 தாலுகாவாக பிரிக்க வேண்டும்.

வருவாய்த்துறையில் சர்வேயர்கள் பற்றாக்குறை உள்ளது. 4 ஆயிரம் பேர் இருக்க வேண்டிய இடத்தில் 2 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். எனவே சர்வேயர்கள் நியமிக்கப்பட வேண்டும். நவீன முறையில் நில அளவை பணிகளை மேற்கொள்ள நில அலுவலர்களுக்கு ரோவர் கருவிகள் வழங்க வேண்டும். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சர்வேயர்களுக்கு நிலத்தில் பயிற்சி அளிக்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Salavakkam ,DMK ,K. Sundar ,
× RELATED திமுக வேட்பாளர் செல்வத்தை 5 லட்சம்...