5,108 ஏக்கர் பயன்பெறும் வகையில் வரட்டாறு நீர்த்தேக்கத்தில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு கலெக்டர் திறந்து வைத்தார்

அரூர், ஏப். 19: அரூர்  வள்ளிமலை வரட்டாறு நீர்தேக்கத்தில் இருந்து, நேற்று பாசனத்துக்கு தண்ணீரை கலெக்டர் திவ்யதர்சினி திறந்து வைத்தார். தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம் வள்ளிமலை வரட்டாறு நீர்தேக்கத்தில் இருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டின் இடது மற்றும் வலது கால்வாய்களின் வழியாக, பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கலெக்டர் திவ்யதர்சினி பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது: முதல்வர் ஆணைபடி, வரட்டாறு நீர்தேக்கத்தில் இருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள 25 ஏரிகளுக்கு, தொடர்ந்து 20 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 30 கனஅடி வீதமும், புதிய ஆயக்கட்டு பகுதியில் உள்ள நேரடி பாசனத்திற்கு 20 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு 30 கனஅடி வீதமும் 40 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதன் மூலம், பழைய ஆயக்கட்டு பகுதியில் 2,555 ஏக்கர் நிலமும், புதிய ஆயக்கட்டு பகுதியில் 2,553 ஏக்கர் நிலமும் என மொத்தம் 5,108 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறும். வள்ளிமதுரை, தாதரவலசை, சாமநத்தம், கீரைப்பட்டி, குடுமியாம்பட்டி, அச்சல்வாடி, எல்லப்புடையாம்பட்டி, கெளாப்பாறை, ஈட்டியம்பட்டி, மாம்பாடி மற்றும் செல்லம்பட்டி ஆகிய 15 கிராமங்கள் பயன்பெறும். விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, பாசனம் செய்து பயன் பெறவேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரத் துறை) மேல்பெண்ணையாறு வடிநில கோட்டச் செயற்பொறியாளர் குமார், ஆர்டிஓ முத்தையன், அரூர் தாசில்தார் கனிமொழி, உதவி பொறியாளர் பிரபு, ஒன்றிய செயலாளர்கள் சந்திரமோகன், சௌந்தரராசு, பொறியாளர் சென்னகிருஷ்ணன், டாக்டர் சுரேஷ்குமார், ஊராட்சி மன்ற தலைவர் அமுதாசங்கர், பெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: