×

கருவேப்பிலங்குறிச்சி அருகே கனமழையால் வீடு இடிந்து வீட்டின் மேற்கூரை உள்வாங்கியது அதிர்ஷ்டவசமாக தாய், மகள் உயிர் தப்பினர்

விருத்தாசலம், ஏப். 19: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள க.இளமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (45). இவரது மனைவி கோமதி (40). இவர்களுக்கு முத்து (25) என்ற மகனும், சத்யா (22), சந்தியா (17) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். கிருஷ்ணமூர்த்தியும் அவரது மகன் முத்துவும் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். சத்யாவுக்கு திருமணம் செய்து கொடுத்த நிலையில் அவரது இளைய மகள் சந்தியாவும், கோமதியும் வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்திராகாந்தி நினைவு குடியிருப்பு திட்டத்தில் கட்டிக்கொடுத்த வீடு என்பதால், தற்போது வலுவிழந்து இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 தினங்களாக அப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் வீடு ஈரப்பதத்தில் இருந்து வந்துள்ளது. மேலும் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் இடைவிடாத மழை பெய்ததால், வீட்டின் சுவர்கள் ஈரப்பதத்துடன் இருந்து வந்துள்ளது. நேற்று காலை கோமதி வீட்டில் சமைத்துவிட்டு, சந்தியாவை பள்ளிக்கு அனுப்பிவிட்டு 100 நாள் வேலைத்திட்டத்துக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென வீட்டின் மேற்கூரை முழுவதும் இடிந்து வீட்டுக்குள்ளேயே விழுந்துள்ளது.

இதுகுறித்து அறிந்த அப்பகுதியினர் கோமதிக்கு தகவல் அளித்துள்ளனர். பின்பு அங்கு வந்த கோமதி வீடு இடிந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியும் கவலையும் அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் தாசில்தார் தனபதி, கிராம நிர்வாக அலுவலர் ரேகா மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து வீட்டை இழந்த கோமதி குடும்பத்துக்கு நிவாரண உதவிகள் வழங்கினர். இதேபோல் அப்பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 40க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழும் சூழ்நிலையிலும் வீட்டில் குடியிருந்து வருகின்றனர். இதனால் அனைத்து வீடுகளையும் அப்புறப்படுத்தி புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் கோமதி வீடு இடிந்து விழும் போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் இன்றி கோமதியும் சந்தியாவும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த டிவி, பிரிட்ஜ், பேன், பீரோ, கட்டில்கள் அனைத்தும் நொறுங்கி சேதமாகியுள்ளன. இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Karuvappilankurichi ,
× RELATED கருவேப்பிலங்குறிச்சி அருகே கனமழையால்...