புதுச்சேரி காங்., கட்சி தலைவர் பதவி சீனியர்- ஜூனியர்கள் கடும் போட்டி

புதுச்சேரி, ஏப். 19: புதுச்சேரியில் கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு  ஏற்பட்டுள்ள கடும் பின்னடைவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர்  நியமிப்பதற்கான நடவடிக்கையில் கட்சி தலைமை ஈடுபட்டுள்ளது.

காங்கிரஸ்  கட்சி தலைவர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் கந்தசாமி, துணைத்தலைவர்  அனந்தராமன் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதனை  உறுதிப்படுத்தும் விதமாக முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி மற்றும்  அனந்தராமன் ஆகியோர் கட்சி தலைவர் சோனியாகாந்தியை நேரில் சந்தித்து பேசினர்.   அப்போது, உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக கட்சியை  பலப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென கட்சி தலைவர்  அறிவுறுத்தினார்.  

அப்போது தொண்டர்கள், நிர்வாகிகள் கருத்துகளை அறிந்து  புதிய தலைவரையும் நியமிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.  இது தொடர்பாக  ஆலோசிக்க விரைவில் மேலிடப்பொறுப்பாளர்கள் புதுச்சேரிக்கு வருகை தரவுள்ளதாக  கட்சி தலைமை தெரிவித்தது. புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில்  கந்தசாமி அல்லது அனந்தராமன் புதிய தலைவராக நியமிக்க அதிக வாய்ப்பிருப்பதாக  கூறப்பட்டது. ராகுல்காந்தியை, அவரது இல்லத்தில் அனந்தராமன் சந்தித்தார். புதுச்சேரியின் அரசியல் நிலவரம், எதிர்கால திட்டங்கள், காங்கிரஸ் கட்சியை  வலுப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து  கேட்டறிந்தார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் எதிர்கால நடவடிக்கை குறித்து சோனியாகாந்தி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் நாடு முழுவதில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

புதுச்சேரியில் இருந்து சீனியர் தலைவர்கள் முன்னாள் முதல்வர்  நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்பி, தற்போதைய கட்சி தலைவர் ஏவி சுப்பிரமணியன்  ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். அப்போது புதுச்சேரியில் காங்கிரஸ்  கட்சியின் புதிய தலைவர் நியமனம் தொடர்பாக அலோசனை நடத்தவுள்ளனர். இதில்  வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோரும் கட்சி தலைவர் பதவிக்கு விரும்புவதாக தகவல்  வெளியாகியுள்ளது. கட்சி தலைவருக்கான போட்டியில், சீனியர் தலைவர்களுக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது.  புதிய தலைவருக்கான போட்டியில் சீனியர்களும் களத்தில் குதித்திருப்பதால்,  கட்சி தலைமை புதுமுகத்துக்கு வாய்ப்பளிக்குமா? அல்லது சீனியர் தலைவர்களை  நியமிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related Stories: