பெரம்பலூர் மாவட்டத்தில் 4 நாட்களாக சதமடித்த சுட்டெரிக்கும் வெயில்

பெரம்பலூர்,ஏப்.19: தமிழகத்தின் மையத்தில் உள்ள மிகச்சிறிய வறண்ட மாவட்டம் பெரம்பலூர் மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் நிரந்தர நீரோட்டமும் நீர் வளமும் கொண்ட ஆறுகளோ ஏரிகளோ இல்லாத நிலையில், குன்றாத கனிம வளத்தை கொண்ட மலை குன்றுகளை குவாரிகள் என்ற பெயரில் மாற்றம் செய்து, வெடிவைத்து வெடித்து 80 சதவீத மலைக்குன்றுகள் ஏலம் விடப்பட்டதாலும், காடுகள் அழிக்கப்பட்டு சாலை விரிவாக்கம் என்ற பெயரில் நூறாண்டு பழமை கொண்ட ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதால் வெப்பத்தின் தாக்கம் வேலூர் மாவட்டத்திற்கு இணையாக தினம் தினம் வேடிக்கை காட்டி வருகிறது. வழக்கமாகமே மாதம் வந்தால் மட்டுமே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்த பெரம்பலூர் மாவட்டத்தில், கடந்த ஒரு வருடமாக மார்ச் மாத தொடக்கத்திலேயே மண்டையை பிளக்கும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் இதுவரை 20 நாட்களுக்குள் 8 முறை 100 டிகிரிக்குமேல் வெப்பம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன்படி ஏப்ரல் மாதத்தில் 1ம் தேதி 38.5 செல்ஷியஸ் வெப்பம், அதாவது 99.3 டிகிரி வெப்பமும், 2ம் தேதி 39 செல்ஷியஸ்வெப்பம், அதாவது 100.2 டிகிரி வெப்பமும், 3ம்தேதி 100.2 டிகிரியும், 4ம்தேதி 99.3 டிகிரியும், 5ம்தேதி 98.4டிகிரியும், ஆறாம் தேதி 100.2 டிகிரியும், ஏழாம் தேதி 100.2 டிகிரியும், எட்டாம் தேதி 98.4 டிகிரியும், 9ம் தேதி 98.4 டிகிரியும், 10ம்தேதி 92.1 டிகிரியும், 11ம்தேதி 92.1டிகிரியும், 12ம்தேதி 92.1டிகிரியும், 13ம் தேதி 94.8 டிகிரியும், 14ம் தேதி 98.4 டிகிரியும், 15ம் தேதி 101.1 டிகிரியும், 16ம் தேதி 102 டிகிரியும், 17ம் தேதி 103 டிகிரியும், நேற்று (18ம்தேதி) 102டிகிரி வெப்பமும் பதிவாகியுள்ளது.

குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில் மட்டுமே சாதாரணமாக 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாவது வழக்கம். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது சாதாரணமாக 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாவது மக்களை வேதனைக்கு உள்ளாக்கி வருகிறது. இதன் காரணமாக வேர்க்குரு, அக்கி, அரிப்பு உள்ளிட்ட அலர்ஜியால் ஏற்படும் உடல் உபாதைகளால் மக்கள் அவதிப்படுவதோடு, சிறிது நேரம் மின்வெட்டு ஏற்பட்டால் கூட புழுக்கம் காரணமாக தூக்கமின்றி தவித்து வருவது வாடிக்கையாகவிட்டது. இதனால் மக்கள் கோடை மழையின் வரவை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Related Stories: