×

அறங்காவலர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது நாகூர் தர்கா புதிய மேனேஜிங் டிரஸ்டி தேர்வு'

நாகை, ஏப்.19: கடந்த 5 ஆண்டுக்கு பின்னர் நாகூர் தர்கா அறங்காவலர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் புதிய மேனேஜிங் டிரஸ்டியாக செய்யது காமில்சாகிப் தேர்வு செய்யப்பட்டார். நாகூரில் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது. இஸ்லாமியர்களின் முக்கிய வழிபாட்டு தலமான நாகூர் தர்காவை 8 பேர் கொண்ட பரம்பரை அறங்காவலர்கள் குழு பல ஆண்டு காலமாக நிர்வகித்து வந்தனர். இந்நிலையில் இந்த 8 அறங்காவலர்களில் ஒருவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் மற்ற நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்ற உத்தரவுப்படி தர்கா நிர்வாகத்தை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆகியோர் இடைக்கால நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டு நிர்வகித்து வந்தனர். இந்நிலையில் இடைக்கால நிர்வாகிகளை நீதிமன்றம் நீக்கியது. இதை தொடர்ந்து தமிழ்நாடு வக்பு வாரிய நிர்வாகிகள் சில மாதங்கள் தர்கா நிர்வாகத்தை நடத்தி வந்தனர்.

அதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு நாகூர் தர்கா நிர்வாகத்தை பாரம்பரிய முறைப்படி அறங்காவலர்கள் நிர்வகிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்படி பரம்பரை அறங்காவலர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. இதனால் மூத்த அறங்காவலரை தேர்வு நேற்று நாகூர் தர்கா அலுவலகத்தில் வாக்குப்பதிவு நடந்தது. இதில் நாகூர் தர்கா மேனேஜிங் டிரஸ்டியாக செய்யதுகாமில்சாகிப் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அறங்காவலர்கள், சாஹிபுமார்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு பின்னர் நாகூர் தர்கா பாரம்பரிய முறைப்படி அறங்காவலர்கள் கட்டுப்பாட்டில் வந்தது.

Tags : Managing Trustee ,Nagore Dargah ,
× RELATED நாகூர் தர்காவில் சந்தன கூடு ஊர்வலம்...