கரூரில் மக்கள்குறைதீர் கூட்டம் 32 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

கரூர், ஏப்.19: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 32 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வழங்கினார். நேற்று நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஒய்வூதியம், வங்கிகடன், இலவச வீட்டு மனைப்பட்டா, வேலை வாய்ப்பு, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை மற்றும் இதர மனுக்கள் போன்றவைகளை கேட்டு 309 மனுக்கள் பெறப்பட்டது. இதில், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 62 மனுக்கள் பெறப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு வந்த கலெக்டர், கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டதோடு, துறை அதிகாரிகளிடம் வழங்கி, ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் அளித்த மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொண்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 2 நபர்களுக்கு காதொலிக் கருவிகளையும், ஒரு நபருக்கு ஊன்றுகோல், ஒரு நபருக்கு அலைபேசி, 2 நபர்களுக்கு மடக்கு சக்கர நாற்காலி, வருவாய்த்துறை மூலம் 6 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவுகளையும், ஆதவற்ற விதவை சான்று ஒரு நபருக்கும், ஒரு நபருக்கு குடும்ப அட்டையும், தங்கத் தந்தை திட்டத்தின் மூலம் கருத்தடை செய்து கொண்ட ஒருவருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா என 32 நபர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், திட்ட இயக்குநர் மந்திராச்சலம், தனித்துணை ஆட்சியர் சைபுதீன் உட்பட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related Stories: