கரூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

கரூர், ஏப். 19: கரூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் தலைக்கவசம் அணியாமல் உள்ளே வந்த அனைவரையும் போலீசார் திருப்பி அனுப்பி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சாலை விபத்தில் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த, அரசு ஊழியர்கள் உட்பட அனைத்து தரப்பினர்களும் ஏப்ரல் 18ம்தேதி முதல் தலைக்கவசம் அணிந்துதான் இரு சக்கர வாகனத்தை ஓட்ட வேண்டும். மேலும், தலைக்கவசம் அணியாமல் பெட்ரோல் பங்க், டாஸ்மாக் போன்ற பகுதிகளுக்கு சென்றாலும் ஒத்துழைப்பு வழங்க கூடாது எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே, அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பொதுமக்கள் இரண்டு சக்கர வாகனங்களில் வந்தனர். ஆனால், நுழைவு வாயில் பகுதியில் நின்றிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, தலைக்கவசம் அணியாமல் உள்ளே வரக்கூடாது என திருப்பி அனுப்பி வைத்தனர். மேலும், அரசு ஊழியர்கள் அனைவரும் இரண்டு சக்கர வாகனங்களில் வரும் போது, தலைக்கவசம் அணியாமல் வர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதால் நேற்று 50 சதவீத ஊழியர்கள் தலைக்கவசம் அணிந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: