கரூரில் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகனஓட்டிகளுக்கு பெட்ேரால் வழங்கினால் நடவடிக்கை

கரூர், ஏப். 19:கரூர் மாநகர பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது தலைக்கவசம் அணியாமல் வரும் வாகனஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கினால் பங்க் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்தார். விபத்தை தடுக்கும் வகையில் அனைத்து இரண்டு சக்கர வாகன ஓட்டிகளும் 18ம்தேதி முதல் தலைக்கவசம் அணிந்துதான் பயணிக்க வேண்டும். தலைக்கவசம் இன்றி பெட்ரோல் போட வந்தால் பங்க் ஊழியர்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு தரக் கூடாது எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கரூர் மாநகராட்சி பகுதியில் உள்ள பெரும்பாலான பங்க்குகளில் தலைக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே நேற்று பெட்ரோல் வழங்கப்பட்டது.

இந்நிலையில், மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் நேற்று தாந்தோணிமலை, லைட்ஹவுஸ் கார்னர் போன்ற பகுதிகளில் செயல்படும் பெட்ரோல் பங்கிற்கு அதிரடியாக சென்று சோதனை மேற்கொண்டார். அப்போது, தலைக்கவசம் அணியாமல் சிலர் பெட்ரோல் போட வந்த போது, அவர்களிடம் தலைக்கவசம் அணியாமல் வந்தால் பெட்ரோல் போட மாட்டார்கள் எனக் கூறி, உங்கள் பாதுகாப்பிற்காகத்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒத்துழைப்பு தாருங்கள் என தெரிவித்தார். தொடர்ந்து, பங்க் நிர்வாகிகளிடம், தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கினால், நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். கரூர் மாநகர பகுதிகளில் உள்ள பங்க்குளில் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் நேற்று அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: