×

வேளாண் துறையால் வழங்கப்படும் மானியங்களை கண்காணிக்க வேண்டும்: கவுன்சிலர்கள் கோரிக்கை

திருவாடானை, ஏப்.14: திருவாடானை ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் தலைவர் முகமது முக்தார் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பாண்டி செல்வி, ஒன்றிய ஆணையாளர் பாண்டி,வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதங்கள்:
கவுன்சிலர் மதிவாணன்: திருவாடானை ஒன்றியத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.

கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை தார்பாய் போட்டு மூடி வைக்காமல் அப்படியே வெட்டவெளியில் மூட்டைகளை வைத்துள்ளனர். இதனால் மழையில் நனைந்து வீணாகி விட்டது. எனவே தார்ப்பாய் போன்ற தளவாட பொருட்களை வழங்கி பாதுகாக்க வேண்டுமென தனித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தலைவர் முகம்மது முக்தார்: கூட்ட முடிவில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். அருணாச்சலம்: முதல்வர் வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் அறிவிப்பு இந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துள்ளார். வேளாண்மை துறை சார்பில் பல்வேறு மானியத் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்தத் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு நேரடியாக சென்றடைகிறதா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும். சில இடங்களில் இன்னும் அதிகாரிகள் புரோக்கர்கள் சொல்லும் நபர்களுக்கு மானியங்களை வழங்கி வருகின்றனர். எனவே வேளாண் மானிய திட்டங்கள் கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கார்த்திகை ராஜா: கடந்த ஆண்டு அதிக மழை பெய்ததால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளும் வந்து பார்வையிட்டனர். அரசு நிவாரணம் கொடுத்தது. ஆனால் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை.

சாந்தி செங்கை ராசு: சினேக வல்லிபுரத்தில் 300 குடும்பங்கள் வசிக்கின்றனர். அங்கு சாதாரண மற்றும் காவிரி தண்ணீரும் செல்லவில்லை. சுதந்திர வரலாற்றோடு தொடர்பு கொண்ட திருவாடானை கிளை சிறைச்சாலை இடிந்து போனதால் ராமநாதபுரத்திற்கு போக வேண்டி உள்ளது. எனவே மீண்டும் திருவாடானையில் கிளை சிறைச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றது. முன்னதாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Department of Agriculture ,
× RELATED நாட்டுப் பசுவில் நன்மைகள் அதிகம்: வேளாண்துறை தகவல்