×

கோடை சீசன் துவங்கியதால் சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஏடிசி பார்க்கிங் தளம் திறப்பு

ஊட்டி, ஏப்.14: சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால், தற்காலிகமாக ஊட்டி ஏடிசி பார்க்கிங் தளம், காந்தல் பார்க்கில் தளங்கள் திறக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். இம்முறை கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கடந்த மாதம் முதல் அதிகரித்துள்ளது.குறிப்பாக, அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வார விடுமுறை நாட்களில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் வரை வருகின்றனர்.

இதனால், ஊட்டி நகரில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பார்க்கிங் தளங்கள் இன்றி சுற்றுலா பயணிகள் பாதிக்கின்றனர். இந்நிலையில், கோடை விடுமுறை முடியும் வரை ஊட்டியில் பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும் என உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். மாவட்ட நிர்வாகம் ஊட்டி நகரில் பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்த நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. ஏடிசி பகுதியில் ரூ.20 கோடி மதிப்பில் மல்டி லெவல் பார்க்கிங் கட்டுவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் பார்க்கிங் தளம் மூடப்பட்டது.

இதனால், அங்கு உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டது. கோடை சீசன் முடியும் வரை இந்த பார்க்கிங் தளத்தை தற்காலிகமாக திறக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மே மாதம் முடியும் வரை இந்த பார்க்கிங் தளம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இந்த பார்க்கிங் தளம் உள்ளூர் வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் நிறுத்துவதற்காக திறக்கப்பட்டுள்ளது.

அதேபோல், காந்தல் பகுதியில் உள்ள பார்க்கிங் தளத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அங்கும் வாகனங்கள் நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும், கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பஸ்கள் பிங்கர்போஸ்ட் முதல் எச்பிஎப் வரை கால்ப்லிங்ஸ் சாலையில் நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊட்டி நகராட்சி கமிஷனர் காந்திராஜன் கூறியதாவது:கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் வாகனங்கள் நிறுத்துவதற்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே, சுற்றுலா பயணிகள் வசதிக்காக தற்போது ஏடிசி பார்க்கிங் தளம் தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது.

நகருக்குள் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து வரும் மக்கள் இந்த பார்க்கிங்கை பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல், காந்தல் பகுதியில் உள்ள பார்க்கிங் தளமும் திறக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் இங்கு நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கால்ப் லிங்ஸ் சாலைகளில் சுற்றுலா பயணிகள் பாஸ்கள் நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : ADC ,
× RELATED “பாஜவில் சேராவிட்டால் கைது” டெல்லி...