×

அம்பத்தூர் தொகுதியில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைத்து தரவேண்டும்: பேரவையில் ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் அம்பத்தூர் ஜோசப் சாமுவேல் (திமுக) பேசும்போது: அம்பத்தூர்  தொகுதிக்கு உட்பட்ட அம்பத்தூர், கள்ளிக்குப்பம், மேனாம்பேடு, இளையான்புரம், காமராஜபுரம் பகுதி மிகவும் பின்தங்கிய தொழிலாளர் இருக்கக்கூடிய பகுதியாகும். அந்த பகுதியில் ஆண்டுதோறும், அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கிற சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெறுவார்கள். அதற்கு ஏற்ப மேல்நிலைப்பள்ளி இல்லை.
இதனால், மாணவர்கள் தங்களுடைய மேல்நிலைப்படிப்பை தொடர முடியாமல் வேலைக்கு செல்லக்கூடிய நிலை உள்ளது. மேலும் தொலை தூரம் சென்று பயில சிரமம் ஏற்படுகிறது. இந்த இன்னல்களை போக்க இந்த பகுதியில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டும். சிறப்பு நிலை நகராட்சியாக இருந்த அம்பத்தூர், கடந்த 2011ம் ஆண்டு சென்னை பெருநகர மாநகராட்சி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. அங்குள்ள ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை பெருநகர மாநகராட்சியுடன் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

இதற்கு பதிலளித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்: மாநிலம் முழுவதும் உள்ள நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் அவ்வப்போது தேவைக்கேற்ப அரசு தரம் உயர்த்தி வருகிறது. நேரடியாக புதிய உயர்நிலைப் பள்ளியோ, மேல்நிலைப் பள்ளியோ துவங்கும் நடைமுறை 1996ம் ஆண்டிலேயே கைவிடப்பட்டது. மாநிலத்தில் உள்ள தேவை, சூழலுக்கேற்ப பள்ளிகளை தரம் உயர்த்துவது பற்றி நிதித்துறையுடன் ஆலோசித்து, அரசின் நெறிமுறைகளின்படி முடிவெடுக்கப்படும். பள்ளிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Tags : Joseph Samuel MLA ,
× RELATED படகு சவாரி, பூங்கா, நடைபாதை அமைத்து...