×

ஊட்டியில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்

ஊட்டி, ஏப்.13: ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க கோரி ஏஐடியுசி போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் ஊட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊட்டி மத்திய பஸ் நிலைய வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல துணை தலைவர் செபாஸ்டியன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் சையது இப்ராஹிம், மண்டல கவுரவ தலைவர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும். 2003க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பென்சன் வழங்குவதற்கு கமிட்டி அமைப்பதாக அரசு தெரிவித்திருந்தது. ஆனால், இதுவரை அதற்கான முயற்சி எடுக்கவில்லை. விரைந்து கமிட்டி அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 78 மாத பஞ்சப்படி உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டும். ஓட்டுநர், நடத்துநர்களுக்கு ஆப்சென்ட் போடப்பட்டு சம்பள இழப்பு ஏற்படுத்துவதை கைவிட வேண்டும்.

பஸ்களுக்கு தேவையான தரமான உதிரிபாகங்கள் வழங்க வேண்டும். போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊட்டி-மதுரை, ஊட்டி-திருச்சி வழித்தட பஸ்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மூன்று டூட்டி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags : AITUC ,Ooty ,
× RELATED இந்தியா கூட்டணிக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு