அதிநவீன கருவிகளை கொண்ட ஆராய்ச்சி பூங்கா விரைவில் நிறுவப்படும் பெரியார் பல்கலை துணைவேந்தர் தகவல்

ஓமலூர், ஏப்.13: சேலம் பெரியார் பல்கலைக்கழகமும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகமும் இணைந்து தங்களுடைய திறனை பரிமாறி கொள்ளும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பஞ்சநதம் முன்னிலையில் இரண்டு பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதனைத் தொடர்ந்து ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இதனையடுத்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் நிருபர்களிடம் கூறியது, ‘மாநில அளவில் முதல் முறையாக இரண்டு அரசு பல்கலைக்கழகங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆசிரியர் பல்கலைக்கழகத்தின் கற்பித்தல் திறனை பெரியார் பல்கலைக்கழகமும், பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் ஆய்வக கட்டமைப்பினை ஆசிரியர் பல்கலைக்கழகமும் பயன்படுத்திக்கொள்ள முடியும். பெரியார் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகளை சமூகத்திற்கு கொண்டு சேர்க்கும் வகையில் அதிநவீன கருவிகளை கொண்டு ஆராய்ச்சி பூங்கா விரைவில் நிறுவப்பட உள்ளது.

தொழில் துறையினர் மற்றும் வணிகத்துறையினர் ஒத்துழைப்புடன், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு சேர்க்கும் வகையில், சேலம் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் சிப்காட் தொழில் பூங்காவுடன் இணைந்து செயல்பட உள்ளது. மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறைக்கு ₹107 கோடி மதிப்பிலான ஆய்வு திட்டங்களுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. பெரியார் பல்கலைக்கழகத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டத்தை தொடர்ந்து பல்கலைக்கழக மானியக்குழுவிடம் ₹100 கோடி நிதி கேட்டு திட்டங்கள் அனுப்பப்பட்டு இருக்கிறது. இந்த நிதி உதவிகள் கிடைக்கும் போது பெரியார் பல்கலைக்கழகத்தில் சர்வதேச தரத்திலான ஆராய்ச்சிகள் நடைபெற உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது, பெரியார் பல்கலைக்கழக (பொ) பதிவாளர் தங்கவேல், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக (பொ) பதிவாளர் சவுந்திரராஜன், உள்தர மதிப்பீட்டு மைய இயக்குனர் வெங்கடாஜலபதி மற்றும் பேராசிரியர்கள் உடனிருந்தனர்.

Related Stories: