நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி காத்திருப்பு போராட்டம்

நாமக்கல், ஏப்.13: நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு, அரசு நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போலி மந்திரவாதி மீது நடவடிக்ைக எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடுத்த குண்டனி நாடு, அடுக்கம், புதுகோம்பை கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட 10 ஏக்கர் அரசு நிலத்தையும், விவசாயிகளுக்கு சொந்தமான 4  ஏக்கர் விவசாய நிலங்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், காத்திருப்பு போராட்டம், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று நடந்தது. தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் பழனிச்சாமி, இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் கண்ணன் ஆகியோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர்.

அரசு நிலம், வரத்து வாரி ஆகியவற்றை ஆக்கிரமிப்பு செய்து, மாந்திரீகம் செய்து வரும் போலி சாமியாரையும், அவருக்கு உடந்தையாக செயல்படுபவர்களை கைது செய்ய வேண்டும். அப்பகுதியில் உள்ள விவசாயிகளின் பட்டா நிலத்தை, அடாவடித்தனமாக மிரட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளதை மீட்டுத்தர வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து நாமக்கல் ஆர்.டி.ஓ., மல்லிகா, கூடுதல் எஸ்.பி., சேகர், டி.எஸ்.பி., சுரேஷ், தாசில்தார் கிருஷ்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு சீல் வைப்பதாகவும், சம்பந்தப்பட்ட இடத்தை விரைவாக அரசு கைப்பற்ற நடவடிக்கை எடுப்பதாகவும், போலி சாமியார் மீது சட்டபடி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும்’ உறுதி அளிக்கப்பட்டது. அதையடுத்து, காத்திருப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து கலந்து சென்றனர். இந்த காத்திருப்பு போராட்டத்தை முன்னிட்டு, அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்க, கலெக்டர் அலுவலகம் முன்பாக, போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Related Stories: