திருச்சி மாநகராட்சியில் குறுகலான சாலையில் குப்பைகள் அள்ளுவதற்கு பேட்டரி கார்கள்

திருச்சி, ஏப்.13: திருச்சி மாநகராட்சியில் சொத்து வரி சீராய்வு உள்ளிட்ட பொருட்களுக்கு அனுமதி வழங்கிட கோரும் அவசர கூட்டம் நேற்று மாலை நடந்தது. மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமை வகித்தார். ஆணையர் முஜிபுர் ரகுமான், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சொத்துவரி குடியிருப்பு கட்டிடங்கள் பொறுத்தவரை 600 ச.அ (சதுர அடிக்கு) குறைவாக உள்ள கட்டிடங்களுக்கு 25%, 601-1200 ச.அ உள்ள கட்டிடங்களுக்கு 50%, 1201-1800ச.அ உள்ள கட்டிடங்களுக்கு 75%, 1800ச.அ மேல் உள்ள கட்டிடங்களுக்கு 100% வரி உயர்வு செய்யவும், ஒவ்வொரு ஆண்டும் வரி உயர்வு செய்து சொத்து வரி சீராய்வு செய்யப்பட வேண்டும், இந்த சொத்துவரி உயர்வு நான்கு மண்டலங்களாக வகைபடுத்தப்பட்டு சொத்து வரி உயர்த்தி வசூலிக்கப்பட உள்ளது.

மேலும் 5 வார்டு குழு அலுவலகம் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வார்டு குழுவுக்கும் 13 வார்டுகள் பிரிக்கப்பட்டு, அந்தந்த வார்டு குழுவுக்கு உட்பட்ட வார்டுகளில் சாலை, குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட அடிப்படை வசதி பணிகளை மேற்கொள்ள ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2022-2023ம் ஆண்டிற்குள் 2000 தெருநாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, ரேபீஸ் நோய் தடுப்பூசி போடுவதற்கும், புதை வடிகால் குழாய் ஆள் இறங்கு குழிகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்வதற்கு தூர்வாரும் வாகனங்கள் 8 எண்ணிக்கையில் வாங்குவது உள்ளிட்ட 19 பொருட்களுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் கவுன்சிலர்கள் கோரிக்கைகளுக்கு பதில் அளித்த மேயர் அன்பழகன், சொத்து வரி மண்டலங்களில் ஏழைகள் உரிய மண்டங்களில் மாற்றம் செய்யப்படுவார்கள். வார்டுக்கு 30-35வீதம் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். குறுகளான சாலைகளில் குப்பைகளை அள்ளுவதற்கு கூடுதலாக பேட்டரி கார்கள் வாங்கப்பட உள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மாநகரில் கொடிசியாக போன்ற கூட்ட அரங்கம் ரூ.30 கோடியில் அமைக்க உத்தரவிட்டுள்ளார். கவுன்சிலர்களுக்கு கட்சி பாராபட்சமின்றி சமமாக நிதி ஒதுக்கீடு செய்யவும் அறிவுறுத்தியுள்ளார் என்றார்.

Related Stories: