×

காரைக்குடியிலிருந்து திருமயத்திற்கு இயக்கப்பட்ட டவுன் பஸ் நிறுத்தம்: மாணவர்கள் அவதி

திருமயம், ஏப்.13: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பணிமனையில் இருந்து பள்ளத்தூர், கானாடுகாத்தான், ஊனையூர் வழியாக திருமயம் வரை தடம் எண் 8ஏ டவுன் பஸ் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தது. இதனால் காலை நேரம் திருமயம் சுற்று வட்டார பகுதியில் இருந்து காரைக்குடி பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகம், தினக்கூலி வேலைக்கு செல்வோர் பயனடைந்து வந்தனர். இதனிடையே கொரோனா தொற்று பரவல் ஊரடங்கு காலத்தின் 8ஏ டவுன் பஸ் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை நிறுத்தப்பட்ட 8ஏ டவுன் பஸ் மீண்டும் இயக்கப்படவில்லை. இதனால் திருமயம் சுற்று வட்டார பகுதியில் இருந்து பள்ளத்தூர், கானாடுகாத்தான், காரைக்குடியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் பணம் கொடுத்து தனியார் பஸ்களில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, 8 ஏ டவுன் பஸ் இயக்கப்படும் நேரத்தில் தனியார் பஸ் ஒன்று இயக்குவதால் அதே நேரத்தில் டவுன் பஸ் இயக்கும்போது தனியார் பஸ் வசூல் பாதிக்கப்படும் என கருதி அதிகாரிகள் டவுன் பஸ் நிறுத்தியதாக குற்றம்சாட்டுகின்றனர்.எனவே புதுக்கோட்டை மாவட்ட அதிகாரிகள் காரைக்குடி பணிமனையில் உள்ள அதிகாரிகளுடன் பேசி திருமயத்திற்கு இயக்கப்பட்ட 8 ஏ டவுன் பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமயம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நிறுத்தப்பட்ட டவுன் பஸ் மீண்டும் இயக்குவதால் திருமயம், குளத்துப்பட்டி, ஊனையூர், சவேரியார்புரம் சுற்று வட்டார பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மாணவ, மாணவிகள் பயன் அடைவார்கள் என்றனர்.

Tags : Karaikudi ,Thirumayam ,
× RELATED உடல் பருமன் குறைய சிறுதானியங்கள் சாப்பிடுங்க