×

கல்குளம், விளவங்கோடு தாலுகா கூட்டுறவு சங்கம் தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

மார்த்தாண்டம் ஏப் 13: கல்குளம், விளவங்கோடு தாலுகா கூட்டுறவு சங்க தலைவர் நாஞ்சில் டொமனிக்கிற்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்தது. வாக்கெடுப்பின்போது சங்க உறுப்பினர்கள் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் விளவங்கோடு தாலுகாக்களை ஒன்றிணைத்து கூட்டுறவு சங்கம் மார்த்தாண்டத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் சுமார் ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.  சங்கத்தின் தலைவராக அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாஞ்சில் டொமனிக் உள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் இவர் திமுகவில் இணைத்து செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கூட்டுறவு சங்க உறுப்பினர் சிவராமன் என்பவர் மாவட்ட கூட்டுறவு சங்க பதிவாளருக்கு புகார் அளித்துள்ளார். தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானமும் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் இதில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாமல் இருந்ததை தொடர்ந்து சிவராமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சங்கத்தலைவர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்து இருந்தார்அதன்பேரில் நேற்று காலை மார்த்தாண்டத்திலுள்ள ஒரு தனியார் மண்டபத்தில் வைத்து சங்க அதிகாரிகள் தலைமையில் வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யபட்டது. இதற்காக காலை முதலே மண்டபத்தில் உறுப்பினர்கள் குவியத் தொடங்கினர். இதில் சங்க உறுப்பினராக இல்லாதவர்கள் வாக்களிக்க வந்ததால் இருதரப்பினர் இடையே வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து சங்க உறுப்பினர்களை சரிபார்த்து மண்டபத்திற்குள் அதிகாரிகள் அனுமதித்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து சங்க தலைவர் உறுப்பினர்கள் மத்தியில் பேசியபோது, சில உறுப்பினர்கள் தலைவரை வெளியேறுமாறு கூறி கூச்சலிட்டனர்.  தலைவர் வெளியேறும் வரை  வாக்களிக்கப்போவதில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மார்த்தாண்டம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு  வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மிகுந்த பரபரப்புக்கு இடையே வாக்கெடுப்பிற்காக வைக்கப்பட்டிருந்த புக்கில் தீர்மானத்தை ஆதரிப்பவர்கள் தனியாகவும் எதிர்ப்பவர்கள் தனியாகவும் கையெழுத்திட்டனர். இதில் தீர்மானத்தை ஏற்பதாக 242 பேரும் நிராகரிப்பதாக 265 பேரும் ெதரிவித்திருந்தனர். இதையடுத்து தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Tags : Kalkulam ,Vilavankodu ,taluka ,
× RELATED நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்.19 பொது விடுமுறை