நாகர்கோவில் நீதிமன்றத்தில் மேலும் ஒருவர் சரண்

நாகர்கோவில், ஏப்.13 : களியக்காவிளை அருகே நடந்த வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் நேற்று நாகர்கோவில் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே குளப்புறம் அடுத்த பாறையடிவிளை பகுதியை சேர்ந்தவர் ஷிஜி (43). இவர் மற்றும், எஸ்.டி.மங்காடு பணமுகம் பகுதியை சேர்ந்த அஜின் (26) என்பவரை, கடந்த 26ம்தேதி, ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. படுகாயம் அடைந்த ஷிஜி, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். இந்த கொலை வழக்கு தொடர்பாக களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தினர். இது ெதாடர்பாக மெதுகும்மல் மேற்குவிளையை சேர்ந்த ஜோஸ், மாராயபுரத்தை சேர்ந்த மகேந்திரகுமார் மற்றும் கூட்டாளியான க்ளைம் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக நடந்த மோதலில் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. மேலும் சிலரை  இந்த கொலை தொடர்பாக போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த மீனச்சல் பகுதியை சேர்ந்த வினு என்பவர் நேற்று முன் தினம் நாகர்கோவில் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதே போல் காப்புக்காடு பகுதியை சேர்ந்த ஷிபு என்பவரை களியக்காவிளை போலீசார் கைது செய்தனர். இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். ஒருவர் சரண் அடைந்து இருந்த நிலையில், நேற்று களியக்காவிளை செம்மாண்விளையை சேர்ந்த சதீஷ் (37) என்பவர், நாகர்கோவில் ஜுடீசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 2 ல் சரண் அடைந்தார். இந்த வழக்கில் இவர் 5 வது குற்றவாளியாக காவல்துறை தரப்பில் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. வழக்கை விசாரித்த நீதிபதி, சதீசை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சதீஷ், நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: