×

டாஸ்மாக் மேலாளர் நடவடிக்கை மீன்பிடி தடைக்காலம் நாளை முதல் அமலுக்கு வருகிறது 3,000 விசைப்படகுகள் கரையில் நிறுத்தும் பணி நாகை மாவட்ட மீனவர்கள் மும்முரம்

நாகை, ஏப்.13: மீன்பிடி தடைக்காலம் நாளை (14ம் தேதி) நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் 3 ஆயிரம் விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாமல் கரையில் நிறுத்தும் பணியில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மீன்களின் இனப்பெருக்கத்திற்காக கிழக்கு கடலோர மாநிலங்களில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி நாளை (14ம் தேதி) நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கும். இதையடுத்து நாகை மாவட்டத்தில் கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, கல்லார், செருதூர், நாகூர் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாமல் நாகை மாவட்டத்தில் உள்ள 3 ஆயிரம் விசைப்படகுகள் கரையில் நிறுத்தும் பணியில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபடுவார்கள்.  

இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி வர்த்தகம் பாதிப்பு ஏற்படும். 1 லட்சம் மீனவர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும். ஜூன் மாதம் 14ம் தேதி நள்ளிரவு தடைக்காலம் நிறைவு பெறும் வரை 61 நாட்களுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருக்கும் காலங்களில் மீனவர்கள் தங்களது படகுகளை பழுது பார்த்தல், வலைகளை சீரமைத்தல் போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபடுவார்கள். வேதாரண்யம்:  மீன்பிடி தடை காலம் துவங்கும் முன்பே விசைப்படகுகள் ஓய்வு எடுக்க கரைக்கு வந்துவிட்டன.  வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையில் 65 விசைப் படகுகள் உள்ளன. வழக்கமாக வரும் 15ம் தேதி கரைக்கு வரும் படகுகள், இந்த ஆண்டு சரியாக மீன்கள் கிடைக்காததாலும், டீசல் விலை உயர்வாலும் மார்ச் கடந்த மாதம் 1ம் தேதியே கடற்கரைக்கு வந்துவிட்டது. ஆழ்கடலுக்குச் செல்லும் பைபர் படகுகளும் கரையோரம் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசு மீன்பிடி தடைகால  நிவாரணத்தை ரூ.25,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தடை மீறி செல்லும் படகுகள் மீது சட்ட நடவடிக்கை
மீன்பிடி தடையை மீறி செல்லும் படகுகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983ன் கீழ் தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கடல் பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டும் மீன்பிடி தடைக்காலம் ஆண்டுதோறும் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் மாதம் 14ம் தேதி நள்ளிரவு முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை மொத்தம் 61 நாட்களுக்கு பாரம்பரிய மீன்பிடி கலன்கள் தவிர விசைப்படகுகள் மற்றம் இழுவை படகுகள் கொண்டு கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதன்படி நாளை(14ம் தேதி) நள்ளிரவு முதல் 61 நாட்களுக்கு மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டு நாகை மாவட்ட மீன்பிடி விசைப்படகுகள், இழுவை படகுகள் கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். விசைப்படகுகள், இழுவை படகுகள் கொண்டு மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீன்பிடி படகுகளின் உரிமையாளர்கள் அப்படகில் உள்ள மீனவர்களுக்கு தொலை தொடர்பு கருவிகள் மூலம் தகவல் தெரிவித்து நாளை இரவு 12 மணிக்குள் தங்களது படகுகளை பதிவு செய்து நங்கூரம் இடப்பட்ட தங்கு தளத்திற்கு கரை திரும்பிட வேண்டும். இந்த அறிவிப்பினை மீறி மீன்பிடிப்பில் ஈடுபடும் படகுகள் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983ன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags : Tasmag ,
× RELATED பொது விடுமுறை நாட்களில்...