காரைக்கால் அரசு கல்லூரியில் ‘நிழல் இல்லாத நாள்’ குறித்து செயல்விளக்க பயிற்சி முகாம்

காரைக்கால், ஏப்.13: மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கி வரும் விஞ்ஞான் பிரச்சார், விஞ்ஞான பாரதி அமைப்புகள், புதுச்சேரி அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஆகியன இணைந்து காரைக்கால் காமராஜர் அரசு கல்வியியல் கல்லூரியில் ‘நிழல் இல்லாத நாள்’ குறித்த பயிற்சி முகாமை நடத்தின. காரைக்கால் மாவட்ட துணை கலெக்டர் (பேரிடர் மேலாண்மை) பாஸ்கரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்தார். இப்பயிற்சி பட்டறையில் நிழல் இல்லாத நாள் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம், இந்த நாளை எப்படி துல்லியமாகக் கணக்கிடுவது?

இந்த நாளில், பூமியின் சுழற்சி வேகத்தை எப்படி கணக்கிடுவது? நாம் வசிக்கும் பகுதியில் இந்த நாள் தென்படுவதை எப்படி கண்டறிவது? உள்ளிட்டவை குறித்து செயல் விளக்கங்களுடன் மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் எடுத்துக் கூறப்பட்டது. மேலும் இந்த வரும் 18ம் தேதி காரைக்காலிலிருந்து கோயம்புத்தூர் வரை ஒரே நேர்க்கோட்டில் உள்ள பகுதிகளில் நிழல் இல்லாத நாள் நிகழும் என்றும், அதனை அறிந்து கொள்வது குறித்தும் கூறப்பட்டது. கலிலியோ அறிவியல் மன்ற தலைவர் உடுமலை கண்ணபிரான் இணைய வழியாகவும், விஞ்ஞான் பிரச்சார் அமைப்பின் புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் நேரடியாகவும் பங்கேற்று விளக்கமளித்தனர். கல்லூரி முதல்வர் கிருஷ்ணபிரசாத், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

Related Stories: