செல்வ விநாயகர் கோயிலில் ஐயப்பன் சிலையின் தலை துண்டிப்பு: நவக்கிரக சிற்பங்கள் சேதம்; உத்திரமேரூர் அருகே பரபரப்பு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த அம்மையப்ப நல்லூர் கிராமத்தில் பழமையான செல்வவிநாயகர் கோயில் உள்ளது. இங்கு மூலவராக விநாயகர் வீற்றிருக்கிறார். வெளிப்பகுதியில் ஐயப்பன், நவக்கிரக சிலைகள், சிவன், நந்தி, பார்வதி உள்பட பல சிலைகளும் உள்ளன. கோயிலை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் காலை, மாலையில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். கிராமத்தை சேர்ந்த பக்தர்கள், கோயிலுக்கு வந்து சுவாமியை தரிசனம் செய்வார்கள். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இக்கோயிலில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பூஜைகள் முடிந்து இரவு கோயில் நடை சாத்தப்பட்டது. நேற்று காலையில் வழக்கம்போல் கோயிலை திறப்பதற்காக பூசாரி சென்றார். அப்போது, அங்குள்ள ஐயப்பன் சிலை உடைக்கப்பட்டு, தலை பகுதி தனியாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், நவக்கிரகங்களில் உள்ள 4 சிலைகள் உடைக்கப்பட்டிருந்தன. இதையறிந்ததும், கிராம மக்கள் கோயிலில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தகவலறிந்து உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அதில், கோயில் சுற்றுச்சுவரை தாண்டி குதித்த மர்மநபர்கள், அங்குள்ள சிலைகளை உடைத்தது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோயிலில் நுழைந்து சிலைகளை உடைத் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: