மேட்டூர் நகராட்சியில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

மேட்டூர், ஏப்.12:மேட்டூர் நகராட்சி அவசர கூட்டம் நகர்மன்ற தலைவர் சந்திரா (திமுக) தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. நகர்மன்ற துணை தலைவர் காசிவிஸ்வநாதன் முன்னிலை வகித்தார். இதில் சொத்து வரி உயர்வு உள்ளிட்டவை விவாதத்திற்கு வைக்கப்பட்டது. கூட்டத்திற்கு அதிமுக கவுன்சிலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தும், கருப்பு சட்டை அணிந்தும் பங்கேற்றனர். அப்போது 5வது அதிமுக வார்டு கவுன்சிலர் லாவண்யா சொத்து வரி உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே வரி உயர்வை கண்டித்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார். இதனை அடுத்து அதிமுக கவுன்சிலர்கள் 5 பேரும் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

மேட்டூர் நகராட்சியில் நவீன கட்டமைப்புகளுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்க உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பேசிய நகர்மன்ற துணைத்தலைவர் காசி விஸ்வநாதன், மேட்டூர் நகராட்சியில் பட்டா இல்லாத வீடுகள் அதிகளவில் உள்ளன. இந்த வீடுகளுக்கு வரி விதித்தால் மட்டுமே அடிப்படை வசதிகளை பெற முடியும். நகராட்சி ஆணையாளர் மற்றும் பொறியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு தகுதியான குடியிருப்புகளுக்கு வரி விதிக்க வேண்டும் என்றார்.

13வது வார்டு உறுப்பினர் கீதா (திமுக) பேசும்போது, 15வது வார்டில் சுகாதார வளாகம் இல்லாததால் அப்பகுதி மக்கள் எனது வார்டுக்கு வந்து செல்கின்றனர். இதனால் 7வது வார்டு மக்களும் அவதிப்படுகின்றனர். எனவே 15வது வார்டுக்கு பொது சுகாதார வளாகம் அமைத்து கொடுக்க வேண்டும் என்றார். 1வது வார்டு திமுக உறுப்பினர் உமா மகேஸ்வரி பேசும்போது, காவலர் பயிற்சிப்பள்ளியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், 1-வது வார்டில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். அவசியம் கருதி பொது நிதியிலிருந்து கால்வாய் அமைத்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

29வதுவார்டு உறுப்பினர் மாரியம்மாள் (விசிக) பேசும்போது, கோடைகாலம் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஒரு மணி நேரம் கூடுதலாக குடிநீர் விநியோகிக்க வேண்டும். நகராட்சியை தூய்மையாக வைத்துக்கொள்ளும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றார்.

2வது வார்டு உறுப்பினர் இளங்கோ (திமுக) பேசுகையில், புதிதாக கட்டும் குடியிருப்புகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு பெறுவதற்கு நகராட்சி பணியாளர்கள் ₹45 ஆயிரம் வரை கட்டணம் பெறுகின்றனர் அதற்கு முறையான ரசீதும் வழங்கப்படுவதில்லை. ஆணையாளர் இதற்கு தீர்வு காண வேண்டும் என்றார். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஆணையாளர் அண்ணாமலை, உறுப்பினர்களின் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். மன்றத்தில் விவாதத்திற்கு வைக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: