×

நாட்டரசன்கோட்டையில் 13ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

சிவகங்கை, ஏப்.12: சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் கோவில் மண்டபம் ஒன்றில் 13ம் நூற்றாண்டு கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. நாட்டரசன்கோட்டையில் இடிந்த மண்டபம் ஒன்றில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. இது குறித்து ஆய்வு செய்த தொல்நடைக்குழு நிறுவனர் காளிராசா, செயலாளர், நரசிம்மன், சரவணன் ஆகியோர் தெரிவித்ததாவது: சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் வீரகண்டான் ஊரணி கரையின் கிழக்குப் பகுதியில் இடிந்த நிலையில் உள்ள உடையவர் கோவில் தெற்கு மற்றும் மேற்கு சுவரில் 9 துண்டுக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. வீர கண்டான் ஊரணிக் கரையில் மேற்குப் பகுதியை விடுத்து மற்ற பகுதிகள் அனைத்தும் கோவில்களால் சூழப்பட்டுள்ளன. அதில் உடையவர் கோவில் என அழைக்கப்படும் இடம் இடிபாடுடன் கூடிய முகப்பு மண்டபமும் அதையொட்டிய பின்பகுதியில் கருவறையுடனும் அமைந்துள்ளது. உடையவர் என்பது ராமானுஜரின் 12திருநாமங்களில் ஒன்றாக அழைக்கப்படுகிறது.

இக்கோவில் ராமானுஜருக்காக அமைக்கப்பட்டுள்ளதை முகப்பு மண்டப தூண்களில் உள்ள ராமர் சிலை, ராமானுஜர் சிலையைக் கொண்டு யூகிக்க முடிகிறது. மேலும் இக்கோவில் பெருமாள் கோவிலை ஒட்டிய பகுதியிலேயே அமைந்துள்ளது. கருவறையில் சிலை ஏதுமில்லாமல் இடிந்த கற்கள் விழுந்து கிடக்கின்றன. இங்கு சிறிதும் பெரிதுமாக துண்டுக் கல்வெட்டுகளை கருவறை வெளிப்புற சுவரில் காண முடிகிறது. இவை ஒன்றோடு ஒன்று தொடர்பற்றுள்ளது.
கல்வெட்டு எழுத்துக்களை கொண்டு இவை பதிமூன்றாம் நூற்றாண்டாகக் கருதலாம். தெற்குப் பக்க சுவரில் நடுவாக அமைந்துள்ள கல்வெட்டு ஒன்றில், முன் பின் பகுதிகள் தொடர்பில்லாமல் இருந்தாலும் ஒரு சில சொற்கள் முழுமையாக உள்ளன. சோணாடு கொண்டருளிய என்ற வரிகளை வைத்து இவை முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன்(1216-1238) கல்வெட்டாக இருக்கலாம். இவ்வாறு தெரிவித்தனர்.

Tags : Nattarasankottai ,
× RELATED நாட்டரசன்கோட்டையில் செவ்வாய் பொங்கல் விழா