×

திருமங்கலம் அருகே கஞ்சா கடத்தலில் கைதான 7 பேரது சொத்துக்கள் முடக்கம்; ஐஜி அதிரடி

திருமங்கலம், ஏப். 12: திருமங்கலம் அருகே தோப்பூர் உச்சப்பட்டி துணைகோள் நகரில் கடந்த மார்ச் 24ம் தேதி மாவட்ட தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி ஆந்திராவிலிருந்து கடத்தப்பட்ட 322 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தெய்வம், ஜெயக்குமார், ரமேஷ், ராஜேந்திரன், குபேந்திரன், மாயி, மகாலிங்கம் ஆகியோரை ஆஸ்டின்பட்டி போலீசார் கைது செய்து ரிமாண்ட் செய்தனர். இந்தநிலையில் தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க், கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கம் செய்யும்படி மாவட்ட எஸ்பி பாஸ்கரனுக்கு உத்தரவிட்டார். இதன்பேரில் எஸ்பி, திருமங்கலம் டிஎஸ்பி சிவக்குமாருக்கு தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். இதன்படி இன்ஸ்பெக்டர்கள் லட்சுமிலதா, சிவககுமார், விஜயபாஸ்கர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் அசையும் அசையா சொத்துகள், வாகனங்கள், வங்கி இருப்பு தொகை, வரவு செலவு ஆகியவற்றை சோதனை செய்தனர்.

இதில் 10 செல்போன்கள், ரூ.50 லட்சம் மதிப்புள்ள 4 அசையா சொத்துக்கள், ரூ.16 லட்சம் மதிப்புள்ள நான்கு வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுதவிர 29 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த கஞ்சா கடத்தலில் தொடர்புடைய மற்ற கஞ்சா வியாபாரிகளையும் கைது செய்து அவர்களின் சொத்துகளையும் முடக்கவும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர்கள் மொத்த- சில்லறை வியாபாரிகள், கஞ்சா வைத்திருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தொடர்ச்சியாக இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஐஜி எச்சரிக்கை செய்துள்ளார்.

Tags : Thirumangalam ,IG Action ,
× RELATED மதுரை திருமங்கலம் அருகே விபத்தில் 4 பேர் பலி