×

வாட்ஸ்அப் வாய்ஸ் ரெக்கார்டிங்கை வைத்து கொலையை தடுத்து நிறுத்திய போலீசார்; கூலிப்படையுடன் ரவுடி கைது

பெரம்பூர்: புளியந்தோப்பு கன்னிகாபுரம் விளையாட்டு மைதானத்தில் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் நேற்று முன்தினம் மாலை விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, போதையில் அங்கு வந்த கன்னிகாபுரத்தை சேர்ந்த ரவுடி மணி (23), கத்தியை காட்டி மிரட்டி, அங்கிருந்த இளைஞர்களிடம் இருந்த 5 செல்போன்களை பறித்துக்கொண்டு தப்பினார். இதுகுறித்து இளைஞர்கள் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, செல்போன் சிக்னலை வைத்து, ராயபுரம் பகுதியில் கத்தியுடன் இருந்த மணி மற்றும் 17 வயது சிறுவனை மடக்கி பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர், மணியின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தபோது, வாட்ஸ்அப்பில் அவர் பேசிய வாய்ஸ் ரெக்கார்டிங் ஒன்று இருந்தது. அதில், திருவொற்றியூரை சேர்ந்த கார்த்திக் (எ) மிக்சர் கார்த்திக்கை நேற்று முன்தினம் மாலை கூட்டாளிகளுடன் சேரந்து கொலை செய்ய இருப்பது தெரியவந்தது. உடனே, போலீசார் இதுகுறித்து திருவெற்றியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் நடத்திய விசாரணையில், மிக்சர் கார்த்திக் ஏற்கனவே திருவொற்றியூரை சேர்ந்த பாண்டியனை கொலை செய்துள்ளார். இதனால், பாண்டியனின் மைத்துனர் தமிழ் பழிக்குப்பழியாக மிக்சர் கார்த்திக்கை கொலை செய்யும்படி மணியிடம் கூறி, அதற்கான ஏற்பாடுகளை செய்து  வந்தது  தெரியவந்தது. இதனையடுத்து  மணியின் கூட்டாளிகளான தமிழரசன், வசந்த், கார்த்திக், பிரபாகரன் ஆகிய 4 பேரை திருவொற்றியூர் போலீசார் கைது செய்தனர். இதேபோல், புளியந்தோப்பு போலீசார் மணி  மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர். உரிய நேரத்தில் விசாரணை நடத்தி, வாலிபர் கொலையை போலீசார்  தடுத்தது குறிப்பிடத்தக்கது.

Tags : WhatsApp ,Rowdy ,
× RELATED திட்டங்களை சொதப்பி விட்டு சமூக...