×

அரியாங்குப்பத்தில் பரபரப்பு குடியிருப்புக்கு மத்தியில் செயல்பட்ட போலி மதுபான தொழிற்சாலை

தவளக்குப்பம், ஏப். 11: அரியாங்குப்பத்தில் குடியிருப்புக்கு மத்தியில் செயல்பட்ட போலி மதுபான தொழிற்சாலையை போலீசார் கண்டுபிடித்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டனர். புதுவை அரியாங்குப்பம் அடுத்த சொர்ணா நகரில் பல  குடியிருப்புகள் உள்ளன. இங்கு ரைஸ் மில் ஒன்று உள்ளது. இந்த ரைஸ் மில் இயங்காமல் மூடியே கிடந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்பு தனி நபர் ஒருவர் வாடகைக்கு எடுத்து  ரைஸ்மில் இயக்குவதாக கூறியுள்ளார். வாடகை எடுத்த நபர், அங்குள்ள குடோனில் ரகசியமாக போலி மதுபான தொழிற்சாலை நடத்தி வந்துள்ளார். முன்னணி நிறுவனத்தின் பெயரில் போலி மது விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளார். அங்கு சந்தேகப்படும்படியாக சில மர்ம நபர்கள் வந்து செல்வதாகவும், அங்கு சட்ட விரோத செயல்கள் ஏதோ நடப்பதாகவும் அரியாங்குப்பம் ஏஎஸ்ஐ அன்பரசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அரியாங்குப்பம் குற்றப்பிரிவு போலீசார் சிரஞ்சீவி, வேல்முருகன், கார்த்தி, உதயகுமார், ராஜேஷ் ஆகியோர் 2 நாட்களாக ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் அங்கு போலி மதுபானம் தயாரிக்கப்படுவது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, தெற்கு எஸ்.பி. ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், எஸ்ஐக்கள் ரமேஷ், குமார் ஆகியோர் அங்கு விரைந்து சென்று போலி மதுபாட்டில் தொழிற்சாலையை பார்வையிட்டனர். அப்போது அங்கு மதுபாட்டில்கள் தயாரித்து வந்த ரெட்டியார்பாளையம் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த இளங்கோவன் (64), பாகூர் பகுதியை சேர்ந்த அழகர் (37), விழுப்புரம் மாவட்டம் கொத்தாம்பாக்கத்தை சேர்ந்த மினிலாரி டிரைவர்கள் அண்ணன் தம்பிகளான பிரகாஷ் (28), ஜெயக்குமார் (21) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதில் முக்கிய குற்றவாளி மனோஜ் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இதில் ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த இளங்கோவன் தான் இந்த மில்லை வாடகைக்கு எடுத்துள்ளார். அதனை பாகூரை சேர்ந்த அழகர் நடத்தி வந்தார். இங்கிருந்த 6 ஆயிரம் குவாட்டர் பாட்டில்கள், 69 கேனில் 2,277 லிட்டர் எரிசாராயம் தயாரிக்க பயன்படுத்திய மெஷின் மற்றும் 2 மினிவேன் உள்பட சுமார் ரூ.50 லட்சத்துக்கும் மேற்பட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த எரிசாராயத்தை மும்பை, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவில் இருந்து வரவழைத்துள்ளனர். இந்த போலி மதுபான தொழிற்சாலையை 2 ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளனர்.

Tags : Ariyankuppam ,
× RELATED வடமாவட்ட சிவகாசியான புதுச்சேரி...