×

புதுச்சேரியில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலம்

புதுச்சேரி, ஏப். 11: உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு விழாவான ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிப்பது வழக்கம். ஆண்டுதோறும் சாம்பல் புதன் வழிபாட்டு திருப்பலியுடன் இந்த தவக்காலம் தொடங்கும். அதன்படி கடந்த மாதம் 2ம் தேதி சாம்பல் புதன் வழிபாட்டுடன், கிறிஸ்தவர்கள் தங்கள் தவக்காலத்தை தொடங்கினர். வழக்கமாக தவக்கால விரதம் தொடங்குவதற்கு அடையாளமாக கடந்த ஆண்டு நடைபெற்ற குருத்தோலை பண்டிகையின் போது பயன்படுத்திய பழைய குருத்தோலைகளை எரித்து, அதில் கிடைக்கும் சாம்பலை நெற்றியில் சிலுவை அடையாளமாக பூசிக்கொள்வர். மேலும் தவக்காலத்தையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகிறது. அசைவ உணவை தவிர்த்தும், ஆடம்பர செலவை குறைத்தும், அதற்கு செலவிடும் பணத்தை சேகரித்து ஏழைகளுக்கு உதவுவார்கள்.

இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவு கூறும் வகையில் இந்த தவக்காலம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி நேற்று குருத்தோலை ஞாயிறு தினம் கடைபிடிக்கப்பட்டது. புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயம், கதீட்ரல் ஆலயம், நெல்லித்தோப்பு விண்ணேற்பு ஆலயம், மிஷன் வீதி ஜென்மராக்கினி, ஆட்டுப்பட்டி அந்தோணியார் கோயில், வில்லியனூர் லூர்து அன்னை, தட்டாஞ்சாவடி பாத்திமா அன்னை தேவாலயம், அரியாங்குப்பம் ஆரோக்கிய அன்னை ஆலயம் ஆகியவற்றில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதையடுத்து குருத்தோலைகளை கையில் ஏந்தி, இயேசு கிறிஸ்துவின் புனித பாடல்களை பாடியபடி புதுச்சேரி நகரின் வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.

Tags : Christians ,Puducherry ,
× RELATED ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள்