×

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இளம்பெண் சாலையில் அமர்ந்து தர்ணா

திண்டிவனம், ஏப். 11: திண்டிவனத்தில் இளம்பெண் ஒருவர் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் நடுரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த புறங்கரை கிராமத்தை சேர்ந்த சங்கர் கணேஷ் மனைவி கோமதி(32). இவரது தந்தை பொன்குமார், திண்டிவனம் சர்கார் தோப்பில் குடும்பத்துடன் வசித்தபோது, திண்டிவனம் பாரதி வீதியில் ஸ்டூடியோ வைத்துள்ள செல்வா என்பவரிடம் 8 லட்சம் ரூபாய்க்கு தனது நிலம் மற்றும் வீட்டை அடமானம் வைத்து பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2016ல் திண்டிவனம் சர்கார் தோப்பில் உள்ள வீட்டில் பொன்குமார் அவரது மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற நிலையில், திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி 4 பேரும் இறந்தனர். பின்பு பணம் கொடுத்த செல்வா, பொன்குமாரின் மூத்த மகள் கோமதி மீது வழக்கு தொடர்ந்ததாக தெரிகிறது. அந்த வழக்கில் பணம் கொடுத்துள்ள செல்வா என்பவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் வீடு மற்றும் நிலத்தை செல்வா பெயரில் மாற்ற பணிகள் நடைபெற்று வருவதாக கோமதிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் நேற்று மதியம் செல்வாவின் ஸ்டூடியோவிற்கு வந்து விபரம் கேட்டுள்ளார். அப்போது அவர் சரியான முறையில் பதில் அளிக்காததால் உரிய நியாயம் வழங்க வேண்டும் என கூறி கோமதி, செல்வா ஸ்டூடியோ எதிரில் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்பு சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் போலீசார் அவரை சமாதானம் செய்து, காவல் நிலையம் அழைத்து சென்றனர். பின்னர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் இரு தரப்பினரிடையே விசாரணை செய்தார். விசாரணைக்கு பின்பு இருவரும் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என கூறி அனுப்பி உள்ளார்.

Tags : Tarna ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...