புதுக்கோட்டை மாவட்டத்தில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா பல்துறை பணிவிளக்க கண்காட்சி அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்து பார்வையிட்டார்

புதுக்கோட்டை, ஏப். 11: புதுக்கோட்டை மாவட்டத்தில் 75வது சுதந்திர தினவிழா, சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாடும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், இந்திய விடுதலைக்கான சுதந்திர போரில் தங்களின் இன்னுயிரையும் தியாகம் செய்த தியாகிகளின் தியாக உணர்வை போற்றும் வகையில் தியாகிகளின் புகைப்படங்கள் அடங்கிய புகைப்படக் கண்காட்சி மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட பல்துறை பணிவிளக்கக் கண்காட்சியினை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி நேற்று துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, தலைமையில் நடைபெற்றது.

கண்காட்சியில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்கண்காட்சி அரங்குகள் மூலமாக ஒவ்வொரு துறையும் தங்கள் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் சிறப்பான முறையில் காட்சிப்படுத்தியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ரகுபதி பேசியதாவது; இக்கண்காட்சியை பார்வையிட வருகை தரும் மக்களின் எதிர்பார்ப்பு குறித்தும் தெரிந்து கொள்வதன் மூலம் அவர்களின் குறைகளை தீர்க்க இயலும். இன்று முதல் 16.4.2022 வரை ஒருவாரகாலம் நடைபெறவுள்ள இக்கண்காட்சியினை புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அனைத்துத் தரப்பு மக்களும் பார்வையிட்டு, அரசின் திட்டங்கள் மூலம் பயனடைய வேண்டும் என அமைச்சர் எஸ்.ரகுபதி பேசினார். அதனைத் தொடர்ந்து 75வது சுதந்திர தினவிழா, சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே நடைபெற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: