மர்மநபர்களுக்கு வலை வாலாஜா நகரம் கிராமத்தில் மண் மாதிரி சேகரித்தல் முகாம்

அரியலூர், ஏப்.11: அரியலூர் மாவட்டம் வாலாஜாநகரம் கிராமத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் மண் பரிசோதனை நிலையத்தின் சார்பில் வாலாஜாநகரம் கிராமத்தில் மண் மாதிரி சேகரித்தல் முகாம் நடைபெற்றது. முகாமில் அரியலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சாந்தி கலந்து கொண்டு மண் மாதிரி எடுத்தலின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்தும், மண் வள அட்டை பரிந்தரைப்படி உரமிடல் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார். முகாமின் போது மண் பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் சுகந்தி மண் எடுத்தல் தருணம், சேகரம் செய்யும் முறை, கால் பங்கீட்டு முறையில் மண் மாதிரி சேகரித்தல் மற்றும் மண் மாதிரி எடுத்தல் குறித்து விவசாயிகளின் வயலில் செயல் விளக்கம் செய்து காண்பித்தார். அறுவடை முடிந்து கோடை பருவத்தில் மண் மாதிரி எடுக்க வேண்டும். நெல், நிலக்கடலை, சிறுதானிய பயிர்களுக்கு அரை அடி ஆழத்திலும், பருத்தி, எள், காய்கறி பயிர்களுக்கு ஒரு அடி ஆழத்திலும் மண் மாதிரி எடுக்க வேண்டும்.

மரப்பயிர்களுக்கு ஒரு அடி, இரண்டு அடி மற்றும் மூன்று அடி ஆழத்திலும் என மூன்று மாதிரிகள் எடுக்க வேண்டும். மண் மாதிரி ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் பத்து இடங்களில் ஆங்கில எழுத்து வி வடிவ குழி எடுத்து, அதன் பக்கவாட்டிலுள்ள மண்ணை சுரண்டி எடுத்து, கால் பங்கீட்டு முறையில் பிரித்து, இறுதியில் அரை கிலோ மண் மாதிரியினை துணிப்பையில் சேகரம் செய்ய வேண்டும். துணிப்பையோடு விவசாயியின் பெயர், தகப்பனார் பெயர், முகவரி, புல எண், உட்பிரிவு எண், அலைபேசி எண், முன்பு சாகுபடி செய்த பயிர், பின்பு சாகுபடி செய்ய போகும் பயிர், பாசன ஆதாரம் போன்ற விவரங்கள் அடங்கிய விபரத்தாள் அனுப்பப்பட வேண்டும். உரமிட்ட உடன், வரப்பு ஓரங்களில், பாசன நீர் வாய்க்காலுக்கு அருகில் மற்றும் மர நிழலில் மண் மாதிரி சேகரிக்க கூடாது. மண்ணின் மேற்பரப்பிலுள்ள குச்சி மற்றும் புல் இல்லாமல் மண் மாதிரி எடுக்க வேண்டும்.

ஒரு மண் மாதிரிக்கு பகுப்பாய்விற்கான கட்டணமாக ரூபாய் இருபது மட்டும் விவசாயிகளிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. மண் மாதிரி பகுப்பாய்வு முடிவகளின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படும் அளவு உரமிடுவதால் அதிகப்படியான உரச்செலவு குறைவதோடு மண்ணின் தன்மையும் பாதுகாக்கப்பட்டு அதிக மகசூல் பெறலாம் என அரியலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார். முகாமில் இருபத்து ஐந்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். முகாமில் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் முருகன், வேளாண்மை அலுவலர்கள் தமிழ்மணி, சதீஷ் , உதவி வேளாண்மை அலுவலர்கள் தேவி, தினேஷ் உடனிருந்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் தேவி செய்திருந்தார்.

Related Stories: