×

சமூகநீதியை நிலைநாட்டி வருகிறார் முதல்வர் கி.வீரமணி பேச்சு

காரைக்குடி, ஏப். 9: காரைக்குடியில் திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு- புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு குறித்த பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வைகறை வரவேற்றார். மாவட்ட தலைவர் அரங்கசாமி தலைமை வகித்தார்.

தி.க. தலைவர் கி.வீரமணி பேசுகையில், ‘மோடி ஆட்சியில் மக்கள் பிரச்னைக்கு பஞ்சமில்லாத நிலைதான் உள்ளது. கடந்த 10 மாதங்களாகத்தான் தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான விடியல் ஆட்சி நடக்கிறது. அந்த ஆட்சியின் செயல்பாட்டையும் எப்படி முடக்குவது என திட்டமிட்டு செயல்படுகின்றனர். மோடி ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. அதானி, அம்பானி போன்றவர்கள் தான் மகிழ்ச்சியாக உள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை 16 நாட்களில் 13 முறை உயர்ந்துள்ளது. அதுபோல் கேஸ் விலையும் உயர்ந்துள்ளது. இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு இல்லாமல் சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. நீட், புதிய கல்வி கொள்கை, மாநில உரிமை பறிப்பது புற்றுநோய் போன்றது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். கல்வி தான் அடித்தளம். அதனை ஒழிக்க தேசிய கல்வி கொள்கை என ஆர்எஸ்எஸ் கொள்கையை கொண்டு வருகின்றனர். அனைவருக்கும் அனைத்தும் என்பது தான் சமூக நீதி. முதல்வர் சமூகநீதியை நிலைநாட்டி வருகிறார். நீட் தேர்வை ஒழிக்க முதல்வர் குற்றம் குறைபாடு இல்லாத அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அதனை குடியரசு தலைவருக்கு கவர்னர் அனுப்பாமல் உள்ளார். கவர்னர் அரசியல் சட்டப்படி நடக்கவில்லை. கவர்னர் மூலம் போட்டி அரசு நடத்த ஒன்றிய அரசு செயல்படுகிறது.

புதிய கல்விக்கொள்கை குலக்கல்வி திட்டத்தை கொண்டு வரும் முயற்சி. நீட், க்யூட் டை மியூட் ஆக்க வேண்டும்’ என்றார். இதில் மண்டல தலைவர் சாமி திராவிடமணி, மாவட்ட தலைவர் இன்பலாதன், மணிவண்ணன், தலைமைக்கழக பேச்சாளர் என்னாரெசு பிராட்லா, திமுக பொதுக்குழு உறுப்பினர் கருஅசோகன், மதிமுக மனோகரன். ஏஐடியூசி ராமச்சந்திரன், நகர்மன்ற உறுப்பினர் ஹேமலதாசெந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,K. Veeramani ,
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...