×

கோத்தகிரி அருகே போதையில் தகராறு செய்த போலி அரசு அதிகாரி, நிருபர் கைது

கோத்தகிரி, ஏப்.9: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அருகே ஓரசோலை நகரை சேர்ந்தவர் மனோ (37). இவர் தனது உறவினர் சிவராம் (30) என்பவருடன் நேற்று முன்தினம் மாலை காரில் சென்றார். டான்போஸ்கோ சாலை வழியாக சென்றபோது, சாலையோரம் அமர்ந்திருந்த 2 மாணவர்களிடம் கஞ்சா போடுவதற்கு இங்கு அமர்ந்துள்ளீர்களா? என இருவரும் கேட்டுள்ளனர்.

நாங்கள் அரசு அதிகாரிகள் என்றும், உங்களை போன்ற வாலிபர்களை சோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அவர்கள் கூறி உள்ளனர். இதையடுத்து, 2 மாணவர்களிடம் சோதனை செய்தனர். அப்போது, காரை நடுரோட்டில் நிறுத்தி இருந்ததால், சாலையில் வந்த வாகன ஓட்டிகள் காரை ஓரமாக நிறுத்துமாறு மனோவிடம் கூறி உள்ளனர். ஆனால் மனோ, குடிபோதையில் இருந்ததால், காரை ஒதுக்கி நிறுத்தாமல், வாகனத்தில் வந்த தாந்தநாடு பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நடராஜ் மற்றும் வாகன ஓட்டிகளிடம் நாங்கள் அரசு அதிகாரி என்று கூறி நீண்ட நேரம் வாக்குவாதம் செய்தனர்.

இது குறித்து வாகன ஓட்டிகள் மற்றும் நடராஜ் கோத்தகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவயிடத்துக்கு இன்ஸ்பெக்டர் வேல்முருகன், எஸ்ஐ சேகர் உள்ளிட்ட போலீசார் சென்று விசாரணை நடத்தினர். இதில் மனோ, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் என்றும், சிவராமன் நிருபர் என்றும் அடையாள அட்டையை காண்பித்து போலீசாரை மிரட்டி உள்ளனர். இதைத்தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் மனோ, போலி அரசு அதிகாரி என்றும், சிவராமன் எந்த பத்திரிகையிலும் வேலை செய்யாமல் போலி அடையாள அட்டையை வைத்திருந்ததும் தெரிய வந்தது. மேலும், இருவரும் அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தை பெற்று மோசடி செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிந்து, 2 பேரையும் கைது செய்து, கோத்தகிரி நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி குன்னூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Tags : Kotagiri ,
× RELATED கோத்தகிரி சுற்றுவட்டாரங்களில் இதமான காலநிலை நிலவுகிறது