திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு வெங்காயத்திற்கு உரிய விலை கேட்டு ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஏப்.8: திருப்பூரில் வெங்காயத்திற்கு உரிய விலை கேட்டு விவசாயிகள் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பல ஏக்கர் நிலங்களில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. வெங்காய சாகுபடிக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

தற்போது, கிலோ ரூ.8க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் வெங்காயத்திற்கு உரிய விலை கேட்டு திருப்பூர் மாவட்ட கலெக்டர்  அலுவலகம் முன்பு சாலையில் வெங்காயத்தை கொட்டி ஒப்பாரி வைத்து கவன  ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்க வேண்டும். வெங்காயம் மற்றும் காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்க அவற்றை ஏற்றுமதி செய்ய ஒன்றிய, மாநில அரசுகள் அனுமதி வழங்க வேண்டும். கூட்டுறவுத்துறை மூலம் குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ.40க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே செல்ல விவசாயிகள் முயன்றனர். அப்போது, போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து உதவி போலீஸ் கமிஷனர் வரதராஜன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதன்பின், விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இதில், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: