கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை துரிதப்படுத்த வேண்டும்: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

கோவை, ஏப்.8: தமிழக சட்டமன்றத்தில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சி துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி கொறடாவுமான  எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: கோவை மண்டல மக்களின் 60 ஆண்டு கனவுத்திட்டமான அத்திக்கடவு -அவிநாசி திட்டம், பில்லூர் 3-வது கூட்டுக்குடிநீர் திட்டம், உப்பிலிபாளையம் முதல் சின்னியம்பாளையம் (விமான நிலையம் வரை) வரை 10.1 கி.மீ நீளம்  உயர்மட்ட மேம்பாலம், ஆத்துப்பாலம் - உக்கடம் வரை  உயர்மட்ட மேம்பாலம், திருச்சி சாலை ராமநாதபுரம் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம், மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையம், ஜி.என்.மில்ஸ் மற்றும் பெரியநாயக்கன்பாளையத்தில் மேம்பாலம், மெட்ரோ ரயில் திட்டம், விமான நிலையம் விரிவாக்கம், மேற்கு புறவழிச்சாலை, வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம், திறன்மிகு நகரங்கள் திட்டப்பணிகள், பாதாள சாக்கடை திட்டப்பணிகள், கோவை மாநகராட்சி பகுதிகளில், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை, திட்டப்பணிகளால், பழுதான சாலைகள், மழைக்காலத்தில் சேதமடைந்த சாலைகள் ஆகியவை ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு பணி துவங்க இருந்தது. ஆனால், இந்த திட்டங்கள்   ரத்து  செய்யப்பட்டுள்ளன.  இத்திட்டப்பணிகளை நிறைவேற்றி, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

நடப்பாண்டின் நிதி நிலை அறிக்கையில், உள்ளாட்சி துறைகளுக்கு போதுமான அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கடந்த ஒராண்டாக, போதுமான அளவில் வளர்ச்சி பணிகள் நடைபெறாத நிலையில், மக்களின் முக்கிய அடிப்படை தேவைகள, நிறைவேற்ற உள்ளாட்சி துறைக்கு இன்னும் கூடுதலாக, நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும். ஏழை, எளியோரின் பசிப்பணியை போக்கும் வகையில், அம்மா உணவகம் திட்டம், தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும். கோவை மாநகராட்சியில், திறன்மிகு நகரத்திட்டங்களின் கீழ், எடுத்துக்கொள்ளப்பட்ட பணிகள், கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதை, துரிதப்படுத்த வேண்டும். புதியதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள, மதுக்கரை, கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர், திருமுருகன்பூண்டி உள்ளிட்ட 28 நகராட்சிகளுக்கு, தலா 2 கோடி ரூபாய் வீதம், 56 கோடி ரூபாய், சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டது போதுமானதாக இல்லை. அம்மா இருசக்கர வாகன திட்டத்தின்கீழ் கடந்த ஆட்சியில் 3 லட்சத்து 9 ஆயிரத்து 30 உழைக்கும் மகளிர் பயன்பெற்றனர். எனவே, இத்திட்டத்தை தொடர வேண்டும். அம்மா மினி கிளினிக் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம், குடிமராமத்து திட்டம் என  பொதுமக்கள் நலன் கருதி கொண்டுவரப்பட்ட முந்தைய அரசின் திட்டங்களை, தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். கொரோனா தாக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மக்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக இக்கட்டான சூழ்நிலையில் வசிக்கிறார்கள். எனவே, சொத்துவரி உயர்வை, அரசு கைவிட வேண்டும். இவ்வாறு எஸ்.பி.வேலுமணி பேசினார்.

Related Stories: