ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் உத்திரமேரூர் பகுதியில் தொழிற்பயிற்சி நிலையம்: சட்டசபையில் க.சுந்தர் எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில், உத்திரமேரூர் பகுதியில் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும் என சட்டசபையில் க.சுந்தர் எம்எல்ஏ வலியுறுத்தி பேசினார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் (திமுக) பேசியதாவது: உயர்க்கல்வி என்பது சற்று சிரமமாக தான் இருக்கிறது. குறிப்பாக கிராமப்புறத்தில் வாழும் ஏழை, எளிய, விவசாய குடும்பங்களை சார்ந்த மாணவர்களுக்கு, அந்த வாய்ப்பு குறைவாக இருக்கிறது. இடையிலே 10, 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வியை பெறமுடியாத, வாய்ப்புள்ள அந்த மாணவர்கள் தொழிற்கல்வியில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். அந்தந்த தொழிற்பயிற்சியை பெற்றால் சுய வேலைவாய்ப்பு அல்லது தனியார், அரசு துறைகளில் சேர்ந்து பணிபுரியும் ஒரு வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியான உத்திரமேரூர் பகுதியில் 73 ஊராட்சிகளை கொண்ட மிகவும் பின்தங்கிய, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஏழை, எளிய மக்கள், தாழ்த்தப்பட்ட பகுதிகளை கொண்ட அந்த பகுதியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை அமைத்து தர ேவண்டும். அமைச்சர் சி.வி.கணேசன்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் 11 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஒப்பளிக்கப்பட்ட 1584 இருக்கைகளில், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 சதவீதம் இடங்களை அரசு ஒதுக்கீட்டின் கீழ் மாவட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பி பயிற்சி கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற திட்டத்தின் கீழ், ஒப்பளிக்கப்பட்ட 110 இடங்களில், 107 இடங்கள் காலியாக உள்ளன. மொத்தம் 866 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கின்றன.

க.சுந்தர்(திமுக): உத்திரமேரூர் பகுதியில் இருப்பவர்கள், செங்கல்பட்டு அல்லது சென்னைக்கு செல்லக்கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால், இன்றைக்கு வளர்ந்து வரும் மக்கள் தொகையின் அடிப்படையில் இங்கு நிறைய காலி இடங்கள் இருப்பதாக அமைச்சர் சொன்னார். தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், அங்கேயிருக்கும் ஏழை விவசாய மாணவர்களால் கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலைமை இருக்கிறது. எனவே, அந்த நிலையை மாற்றி உத்திரமேரூர் பகுதியில் தொழிற்பயிற்சி நிலையம் அமைத்து தந்தால், அந்த பகுதி மாணவர்கள் பயன்பெறுவதற்கு ஏதுவாக இருக்கும். எனவே, அங்கு தொழிற்பயிற்சி நிலையம் அமைத்து தர வேண்டும். அமைச்சர் சி.வி.கணேசன்: புதிய தொழிற்பயிற்சி நிலையம் அமைப்பது குறுித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று கட்டாயம் பரிசீலிக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: