நாமக்கல், ஏப்.7: நாமக்கல் - சேந்தமங்கலம் ரோடு எம்ஜிஆர் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் பேபி (எ) சசிகலா (36). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், நாமக்கல் நகராட்சி 13வது வார்டில் போட்டியிட்ட ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் ஜெயந்திக்கு ஆதரவாக, அந்த பகுதியில் வாக்கு சேகரித்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை, மொபட்டில் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பேபி, திடீரென பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை அவரது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார், இதை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.
பின்னர் 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக பேபி அனுப்பி வைக்கப்பட்டார். தேர்தல் முன்விரோதம் காரணமாக, தனக்கு கொலை மிரட்டல் வருகிறது. தன் மீது பொய்யான புகார்களை சிலர் கூறி வருவதாக போலீசாரிடம் பேபி தெரிவித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்.