×

பிஏபி, அமராவதி பாசன சங்க நிர்வாகிகள் தேர்தல் 464 விவசாயிகள் வேட்புமனுதாக்கல்

உடுமலை,ஏப்.5:  பிஏபி மற்றும் அமராவதி பாசன சங்க நிர்வாகிகளுக்கான தேர்தலில்  போட்டியிடுவதற்காக உடுமலையில் 325 விவசாயிகளும், மடத்துக்குளத்தில் 139  விவசாயிகள் என மொத்தம் 464 விவசாயிகள் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். பரம்பிக்குளம்  ஆழியாறு பாசன திட்ட கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் மற்றும்  ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்கள் தேர்வு செய்த பின்,பகிர்மானக்குழு  தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும். பகிர்மானக்குழு தலைவர்களில் ஒருவரை  திட்டக்குழு தலைவராக தேர்வு செய்கின்றனர். பாசன சபையினர், நீர்  நிர்வாகம், கால்வாய் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவர்.  இப்பதவிகளுக்கு கடந்த 2009-ம் ஆண்டு தேர்தல் நடந்தது.
 5 ஆண்டாக இருந்த  பதவிக்காலம், கூடுதலாக 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு  டிசம்பர் 31-ம்  தேதியுடன் முடிவுற்றது. அதன்பிறகு கடந்த 8 ஆண்டுகளாக  தேர்தல் நடத்தவில்லை. தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிஏபி பாசனத்  திட்டத்தில், உடுமலை தாலுகாவில் 36 சங்கம், 234 ஆட்சி மண்டல தொகுதிக்கு  வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், 3 சங்கம், 14 ஆட்சி மண்டல  தொகுதிக்கு மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் நேற்று  துவங்கியது.

இதில் உடுமலையில் மட்டும் 325 பேர் வேட்புமனுதாக்கல் செய்தனர்.  மடத்துக்குளத்தில் 139 பேர் வேட் புமனுதாக்கல் செய்தனர். இதேபோல,  அமராவதி பாசனத்திட்டத்துக்கு 22 சங்கங்கள், 88  ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களுக்கு மனுத்தாக்கல் மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில்  துவங்கியது. வேட்புமனு பரிசீலனை வரும் 8ம் தேதியும், போட்டியிருந்தால்  தேர்தல் 17ம்தேதி காலை 7 மணிக்கு நடைபெறும். ஓட்டு எண்ணிக்கை அன்று மாலை  நடைபெறும். பாசன சங்க நிர்வாகிகள் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக  வருவாய் கோட்டாட்சியர், துணை கலெக்டர்களும், உதவி தேர்தல் நடத்தும்  அலுவர்களாக தாசில்தார் நிலையிலான அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். பாசன சபைகளுக்கான தேர்தல், நீண்ட இடைவெளிக்கு பிறகு நடைபெறுவதால், பலத்த போட்டி நிலவுகிறது.

Tags : BAP ,Amravati Irrigation Association ,
× RELATED பிஏபி கால்வாய் கரையோரம் சட்ட விரோத...