×

நீலகிரியில் அதிவேகமாக செல்லும் டிப்பர் லாரிகளால் விபத்து அபாயம்

ஊட்டி, ஏப்.5:  வெளி  மாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு தார் கலவைகள் மற்றும்  கட்டுமான பொருட்களை ஏற்றி வரும் டிப்பர் லாரிகள் அதிவேகமாக செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நடக்கும்  அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகளுக்காக மேட்டுப்பாளையம் மற்றும் கோவை  போன்ற பகுதிகளில் இருந்து மணல், ஜல்லி கற்கள், செங்கல், கம்பிகள் மற்றும்  இதர பொருட்கள் டிப்பர் லாரிகளில்  இங்கு கொண்டு வரப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் தார் கலவை  தயாரிக்கும் பிளான்ட் இல்லாத நிலையில், சமவெளிப் பகுதிகளில் இருந்தே தார்  கலவைகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு சுமார் 10 முதல் 20 லாரிகள் வரை  வந்து செல்கின்றன. கலவை லாரிகள் குறித்த நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். இது தவிர, நாள் ஒன்றுக்கு 3 அல்லது 4 முறை மேட்டுப்பாளையத்திற்கு சென்று வரவேண்டும். இதற்காக லாரியை ஓட்டுநர்கள் அதிவேகமாக ஓட்டுகின்றனர்.

மலைப்பாங்கான  நீலகிரி சாலைகளிலும் இந்த வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுகிறது. வளைவுகள்,  குறுகிய சாலைகள் அனைத்து பகுதிகளிலும் வேகமாக இயக்குவதால், விபத்து  ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில சமயங்களில் சிறு விபத்தும் ஏற்படுகிறது. தற்போது சீசன் துவங்கியுள்ள நிலையில், வெளியூர்களில் இருந்து  ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்கள் மூலம் வருகின்றனர். குறிப்பாக, வார  விடுமுறை நாட்களில் வெளியூர்களில் இருந்து ஏராளமான வாலிபர்கள் பைக்கில் வருகின்றனர்.

எனவே, சமவெளிப் பகுதிகளில் இருந்து நீலகிரி  மாவட்டத்திற்கு நாள் தோறும் வேகமாக இயக்கப்படும் டிப்பர் லாரிகளால் விபத்து  அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த லாரிகள் குறைந்த வேகத்தில் இயக்க  போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Nilgiris ,
× RELATED வார விடுமுறை நாளில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்