×

ஆதிதிராவிட நலத்துறை மாணவிகள் விடுதிகளில் தவறுகள் நடந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை: வாரிய தலைவர் எச்சரிக்கை

காஞ்சிபுரம்: ஆதிதிராவிட நலத்துறை மாணவிகள் தங்கும் விடுதிகளில் தவறுகள் நடந்தால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என வாரிய தலைவர் மதிவாணன் எச்சரித்துள்ளார். காஞ்சிபுரம் மாநகராட்சி 39வது வார்டு, கலெக்டர் அலுவலகம் அருகில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் பள்ளி, கல்லூரி  மாணவிகள் தங்கும் விடுதி ₹1.34 கோடியில் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.

மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, எழிலரசன் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆதி திராவிடர் நலத்துறை வாரிய தலைவர் மதிவாணன் தலைமை தாங்கி, மாணவிகள் விடுதி கட்டுவதற்கான பூமி பூஜை தொடங்கி வைத்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது.

கடந்த ஆட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் குறைகள் இருந்தன. விடுதியில் உள்ள பணியாளர்களையும் மாணவ, மாணவிகளை நல்வழியில் நடத்தாததால், கண்காணிக்காததாலும், குறைகள் இருந்தது. அந்த குறைகளை களைவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். குறைகள் குறித்து கண்டறிந்தால் முதல்கட்டமாக முன்னெச்சரிக்கை செய்கிறோம்.

விடுதிகளில் எத்தனை மாணவ, மாணவிகள் தங்கி இருக்கிறார்களோ, அதற்கு தகுந்தாற்போல் உணவுப்பொருட்கள் எடுத்திருக்க வேண்டும். அதற்கு உண்மையான கணக்கு வைத்திருக்க வேண்டு என அறிவுறுத்தி எச்சரிக்கிறோம். சில இடங்களில் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.  தற்போது நாங்களும் சென்று ஆய்வு செய்து வருகிறோம். இனி ஆதிதிராவிட நலத்துறை விடுதிகளில் அதுபோல் தவறுகள் ஏற்படாது, தவறுகள் செய்தால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் குமரகுருநாதன், கவுன்சிலர்கள் சந்துரு, சுரேஷ், அன்பழகன், விஸ்வநாதன் செவிலிமேடு மோகன், கமலக்கண்ணன், திமுக நிர்வாகிகள் யுவராஜ், தசரதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Adithravita Welfare Department ,
× RELATED காஞ்சி சங்கரா பல்கலைக்கழகத்தில் வேதபாடசாலை மாணவர்கள் ஆய்வு