மயிலாடுதுறை அருகே எரிவாயு கொண்டு செல்ல தனியார் இடத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ள ராட்சத குழாய்கள்

மயிலாடுதுறை, ஏப்.2: மயிலாடுதுறை அருகே எரிவாயு கொண்டு செல்வதற்காக தனியார் இடத்தில் ராட்சத குழாய்கள் இறக்கி வைக்கப்பட்டுள்ளதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை அருகே வை.பட்டவர்த்தி கிராமத்தில் நீடூரை சேர்ந்த தனியாருக்கு சொந்தமான இடத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் கனரக வாகனங்கள் மூலம் கொண்டு வரப்பட்ட ராட்சதக் குழாய்களை இறக்கி வைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையும் பொருட்படுத்தாமல் அந்நிறுவனம் ஐந்துக்கு மேற்பட்ட கனரக வாகனங்கள் மூலம் ராட்சத குழாய்களை கொண்டு வந்து இறக்கி வருகிறது. எண்ணூர்-தூத்துக்குடி இடையே எண்ணெய் எரிவாயு குழாய் அமைக்கும் பணிக்காக இந்த ராட்சத குழாய்கள் இறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், அதனை ஏற்காத கிராம மக்கள் குழாய்களை அப்புறப்படுத்தக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் காளிதாசன், பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ரவி, இயற்கை விவசாயி ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் மயிலாடுதுறை- மணல்மேடு இடையே ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மயிலாடுதுறை தாசில்தார் மகேந்திரன், இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் மயிலாடுதுறையில் ஆர்டிஓ பாலாஜி தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இருந்தபோதிலும் பேச்சுவார்த்தையில் ராட்சத குழாய்கள் அப்புறப்படுத்துவது தொடர்பாக சுமூக தீர்வு ஏற்படாவிட்டால் மீண்டும் அனைத்து கிராம மக்களையும் ஒன்று திரட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாசை சந்தித்து மயிலாடுதுறை அருகே நீடூர் வை.பட்டவர்த்தியில் ஐஓசி நிறுவனம் பெருவாரியாகக் குழாய்களைக் கொண்டு வந்து இறக்கி இருக்கிறது. எண்ணெய் - எரிவாயு எடுத்துச் செல்ல குழாய் பதிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஐஓசி ஆயத்தமாகி வருகிறது. உடனடியாக வேலையை தடுத்து நிறுத்தப்பட்டு, பொருட்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என அதில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பிரச்சனையின் தன்மையையும் மக்களின் உணர்வையும் புரிந்து கொண்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என பேராசிரியர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

Related Stories: